திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள தயார்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி

சென்னை: திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டியளித்தார். இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறினார். அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, விடுதலை சிறுத்தைகள் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மதிமுக - 6, காங்கிரஸ் - 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 6 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதேவேளை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவற்றுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று மதியம் 1 மணியளவில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்.

அங்கு திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், ’தமிழக வாழ்வுரிமை கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் மகிழ்ச்சியுடன் ஏற்போம். திமுக-வை வற்புறுத்தமாட்டோம்’ என்றார்.  திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: