திருப்பதியில் மகளிர் தின விழா பெண் போலீசார் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் -மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து எஸ்பி பேச்சு

திருப்பதி : திருப்பதியில் நடந்த மகளிர் தின விழாவில் பெண் போலீசார் உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து எஸ்பி வெங்கட அப்பல நாயுடு தெரிவித்துள்ளார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்பி வெங்கட அப்பல நாயுடு தலைமையில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியை எஸ்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘பெண் காவலர்கள் சிறப்பாக பணிபுரிந்து தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தினமும் உடற்பயிற்சி செய்தால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். தனது பணியுடன் உடல் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து உடற் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றார்.

வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஓட்டப்பந்தயம் பாலாஜி காலனி, அலிபிரி சாலை விலங்கியல் பூங்கா வரை நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், கூடுதல் எஸ்பி சுப்ரஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

Related Stories: