நாங்களும் விளையாடுவோம்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

சென்னையின் அழகுக்கு அழகு சேர்ப்பது பூங்காக்கள்தான். இங்கு பூங்காக்கள்  இல்லாத ஏரியாக்களே கிடையாது. பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும், கணவன்-மனைவி  இருவரும் மனம் விட்டு பேசுவதற்கும் பூங்காதான் ஏற்ற இடம். இங்கு பலதரப்பட்டவர்கள் வருவார்கள். ஆனால் இவர்களால் மட்டும் இங்கு விளையாட முடியாது.

சும்மா அமர்ந்து இருந்தாலும் மற்றவர்களுக்கு காட்சிப்பொருளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை. மாற்றுத்திறனாளிகள்தான். இனி இவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இவர்களுக்கென சென்னை சாந்தோமில் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மற்ற பூங்காவில் இருப்பது  போன்ற அனைத்து விளையாட்டு அம்சங்களும் இங்கும் உள்ளன. எல்லாமே அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது  என்பதுதான் அதன் சிறப்பு. கண்களை கவரும் நிறங்களில் சுவரோவியங்கள்.

அதனை இவர்கள் தொட்டு உணரலாம். அதே போல் அதில் வாகன டயர்கள், வளையல்கள், சிப்பிகள் பதிக்கப்பட்டுள்ளன. இதை அவர்கள் தொட்டு  உணரும் போது, அந்த ஓவியத்தை நாம் எவ்வாறு பார்த்து ரசிக்கிறோமோ அதேேபால் இதனை இவர்கள் உணர்வதின் மூலம் மகிழ்ச்சி  அடைகிறார்கள். சாதாரண குழந்தைகளை போல் மாற்றுத்திறனாளி குழந்தைகளால் விளையாட முடியாது என்பதால் அவர்கள் சக்கர நாற்காலியில்  அமர்ந்தபடியே ஊஞ்சல் விளையாடலாம். இவர்களுக்கான பிரத்யேக சறுக்குமரம் வசதியும் உள்ளது.

‘‘இந்த கொஞ்ச நேரம் எங்கள் குழந்தையின் முகத்தில் தெரியும் புன்முறுவலுக்காகவே நான் பல கிலோ மீட்டர் கடந்து இங்கு வருகிறேன்’’ என்கிறார்  மடிப்பாக்கத்தை சேர்ந்த இளம் தாய். இதனை கவிதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் அமைத்துள்ளார். இவர் Kilikili என்ற தொண்டு நிறுவனத்தை  நிர்வகித்து வருகிறார். கவிதாவின் எண்ணத்திற்கு சிட்டி ஒர்க்ஸ், தனியார் கட்டிடக்கலை நிறுவனம் உரு கொடுத்துள்ளது. 1,529 சதுர மீட்டர்  பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது.

மண், கூழாங்கற்கள், மரம், நார், கான்கிரீட் போன்ற பொருட்களால் நடைபாதை மற்றும் குழந்தைகள் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாத வகையில்  தரை அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, ஆரோவில் சிறுவர்கள் வடிவமைத்த அதிர்வு கல் குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளது. காற்று வீசும்போது  இசை மழை பொழியும் பொம்மைகளும் இங்கு சிறப்பு அட்ராக்‌ஷன். “2005-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள பூங்காவிற்கு சென்றபோது,  மாற்றுத்திறனாளி குழந்தை வீல் சேரில் அமர்ந்து மற்றவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் கண்ணில் தென்பட்ட  ஏக்கம்தான் இந்த பூங்கா உருவாகக் காரணம்’’ என்றார் கவிதா.

- கோமதி பாஸ்கரன்

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: