கினியாவில் ராணுவ வெடிபொருள் கிடங்கில் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறிய ஆயுதங்கள்!: 22 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் காயம்..!!

எக்குவடோரியல்: எக்குவடோரியல் கினியா நாட்டில் ராணுவ வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான எக்குவடோரியல் கினியாவில் பட்டா என்ற நகரத்தில் ராணுவ வெடிபொருள் கிடங்கு செயல்பட்டு வந்தது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5 மணி அளவில் ஆயுதக்கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்ததில் கிடங்கு சற்றுநேரத்தில் தரைமட்டமானது. இந்த விபத்தில் காரணமாக அருகே உள்ள வீடுகளும் இடிந்து விழுந்தன. வெடிவிபத்து எதிரொலியாக ஏற்பட்ட தீ நள்ளிரவு வரை நீடித்தது. வெடி விபத்து ஏற்பட்டவுடன் அங்குள்ள மக்கள் அலறடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதை தொடர்ந்து, ஆயுதக்கிடங்கு வெடிவிபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், படுகாயமடைந்துள்ள 500க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டைனமைட் வெடிபொருளை கவனக்குறைவாக கையாண்டதால் இந்த வெடி விபத்து நேரிட்டதாக விளக்கம் அளித்துள்ள எக்குவடோரியல் கினியா நாட்டின் அதிபர் டியோடோரா ஓபியாங், ராணுவ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: