தூய்மை பணியாளர்களுடன் தேநீர் அருந்தி சாலையை தூய்மைப்படுத்திய மத்தியப் பிரதேச முதல்வர் : மகளிர் தினத்தையொட்டி ருசிகர நிகழ்வு!!

போபால் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாதுகாப்பு பணியில் முழுவதும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டது அனைவரையும் கவர்ந்தது. காலை போபாலில் உள்ள நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் காரை பெண் ஒருவர் ஓட்டினார். வழக்கமாக அவருக்கு வழங்கப்படும் காவல்துறை பாதுகாப்பு பணியிலும் முழுக்க முழுக்க பெண்களே ஈடுபடுத்தப்பட்டனர். போபாலில் பெண் தூய்மை பணியாளர்களை சந்தித்து பேசிய சவுகான், சாலையில் அமர்ந்து அவர்களுடன் தேநீர் அருந்தினார்.

இதையடுத்து அவர்களுடன் சேர்ந்து சாலையை தூய்மைப்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபட்டார். இது குறித்து பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இன்று சர்வதேச மகளிர் தினம். தினமும் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அதிகாலையிலேயே பணிக்கு வந்துள்ள தூய்மைப் பணியாளர்களை பாராட்டுகிறேன். அவர்களால் தான் நமது நகரம் தூய்மையாக இருக்கிறது.அவர்களுடன் பேசினேன். உடனிருந்து தேநீர் அருந்தினேன். பின்னர் மகளிருடன் சேர்ந்து சிறிது நேரம் தூய்மை பணியிலும் ஈடுபட்டேன்,என்றார். இன்றைய நாள் முழுவதுமே சிவராஜ் சவுகான் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் மட்டுமே ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மகளிர் தினத்தில் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மத்திய பிரதேச முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories: