கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்க்கும் காங்., மே.வ., கை கோர்த்துள்ளது: காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிலைப்பாடுதான் என்ன?.. அமித்ஷா கேள்வி

திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளும் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

பாஜக போட்டியிட்டாலும் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று திருவனந்தபுரம் சென்றார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று வெற்றி யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா இதனை தெரிவித்துள்ளார். சண்முகம் திடலில் கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்தியில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது தங்கக்கடத்தல் மற்றும் டாலர் கடத்தலில் பினராயி விஜயனுக்கு நேரடி தொடர்பு உள்ளது. சொப்னா சுரேசை காப்பாற்ற முயற்சிகள் எடுத்தார் என்றும் குற்றம் சாடினார்.

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்றும், ஆனால் அவற்றை இப்போது கூறி பினராயி விஜயனை பயமுறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்க்கும் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் அதே கட்சியோடு கூட்டணியில் இருப்பது எப்படி? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மராட்டியத்தில் சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது என்று சுட்டிக்காட்டியிருக்கும் அமித்ஷா காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை அந்த கட்சி விளக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: