×

அமைச்சர் படம்போட்ட நோட்டு புத்தகம் பறிமுதல் பறக்கும் படை அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

கரூர்: கரூர் பகுதியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் படம் போட்ட நோட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக  விளக்கம் கேட்டு பறக்கும் படை அலுவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட சணப்பிரட்டி பகுதியில் அதிமுக சார்பில் கேசவன் என்பவர் வீட்டில் பரிசுப்பொருளாக வழங்க நோட்டுபுத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து பறக்கும் படை அலுவலர் மணிமேகலை தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட 3,030 நோட்டு புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, கிருஷ்ணராயபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர், பறக்கும் படை அலுவலர் மணிமேகலைக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,தனிநபர் வீட்டுக்கு சென்று சோதனை செய்ய நேரிடும் போது, சோதனை செய்யும் அலுவலர், செலவின பார்வையாளருக்கும், வருமானவரித்துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து, வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், அந்த நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல் தன்னிச்சையாக குறிப்பிட்ட நபரின் வீட்டுக்குள் சென்று நோட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்துள்ளது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது. எனவே, தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளதால் தங்கள் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என்பதற்கான விளக்கத்தை 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், மேல்நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Minister confiscated the note book To the Flying Squadron Officer Notice asking for explanation
× RELATED பண்ருட்டி தொகுதியில் தேர்தல் முடிவை...