பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியை நிச்சயம் அமைப்போம்: திருச்சி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

திருச்சி: 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் 7 துறைகள் முழுமையாக சீரமைக்கப்படும் என திருச்சியில் நடந்த திமுகவின் பிரமாண்ட கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ‘‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்’’ என்ற பெயரில் திருச்சி சிறுகனூரில் நேற்று திமுக சார்பில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மாநாடு போல் பிரமாண்டமாக நடந்தது. இதில், தமிழகத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து பேசியதாவது: இது பொதுக்கூட்டமா மாநாடா என பிரமிக்கும் அளவுக்கு உள்ளது. நான் மாநாடு என்று அறிவிக்கவில்லை. மாபெரும் கூட்டம் என்று தான் அறிவித்தேன். ஆனால் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மற்ற மாவட்ட செயலாளர்களும் இதை ஒரு மாநாடாகவே நடத்தி உள்ளனர். இதை மாநாடு என்று கூட சொல்ல முடியாது. ஐந்து மாநாடு ஒரே நேரத்தில் கூடியதுபோல இது நடந்து கொண்டிருக்கிறது.

நவீன தமிழகத்தை உருவாக்கியது தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. இந்த அடிப்படை கட்டமைப்பை முழுமையாக சிதைத்தது தான் அதிமுக ஆட்சி. திமுக கொண்டு வந்த திட்டங்களை உருகுலைப்பதும் அதிமுக ஆட்சியின் பழக்கமாகவும், வழக்கமாகவும் இருந்தது. ஊழலுக்கு அரசியல் வரலாற்றில் உதாரணமாக ஒரு ஆட்சியை சொல்வதென்றால் அது அதிமுக ஆட்சியாக தான் இருந்தது. இந்திய வரலாற்றிலேயே மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி விலகியது யார் என்று கேட்டால், அதிமுக ஆட்சியை வழிநடத்திய அம்மையார் ஜெயலலிதா தான். அவரது மறைவு அதில் மர்மம். அதற்கு பின்னால் தோழி சசிகலா சிறைக்கு செல்ல வேண்டிய காரணத்தால் அவரது காலை நோக்கி ஊர்ந்துபோய் முதல்வர் பதவியை பெற்றார் பழனிசாமி. அதற்கு பின் பாஜக அடிமையாக சசிகலாவை ஏமாற்றி, பழனிசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த .பன்னீர்செல்வத்தையே துணை முதல்வர் பதவி கொடுத்து பெயருக்கு வச்சுக்கிட்டார் பழனிசாமி.இப்படி 10 ஆண்டு காலத்தில் தமிழகத்தை நாசமாக்கிட்டாங்க.

இந்த ஆட்சிக்கு ஏப்ரல் 6ம் தேதி முற்றுப்புள்ளி வைக்க உள்ளது. மே 2ம் நாள் தமிழகத்தின் புதிய விடியலாக அழகிய பூபாளமாக திமுக ஆட்சி அமைய உள்ளது. அப்படி அமைய இருக்கும் ஆட்சி, தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சியாக பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சியாக கலைஞர் நவீன மேம்பாட்டு ஆட்சியாக பெருந்தலைவர் காமராஜர் கல்வி வளர்ச்சி ஆட்சியாக தோழர் ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக நிச்சயம் அமையும். இத்தகைய ஆட்சியை எப்படி கொண்டு செலுத்துவது என்ற தொலைநோக்குத் திட்டத்தை நான் வடிவமைத்துள்ளேன். கழக முன்னணி நிர்வாகிகள், தமிழக சிந்தனையாளர்கள், பல்துறை வல்லுனர்கள் ஆகியோருடன் கலந்துபேசி இந்த திட்டத்தை உருவாக்கி உள்ளேன். தமிழகத்தின் முக்கியமான 7 துறைகளை முழுமையாக சீரமைத்து, வளர்த்தெடுப்பதையே என்னுடைய முதல் பணியாக கருதுகிறேன். எனது அரசு முன்னுரிமை வழங்க உள்ள 10 ஆண்டு இலக்கு இந்த மாபெரும் கூட்டத்தின் வாயிலாக தமிழக மக்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

இந்த உறுதிமொழிகளுக்கு ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என பெயர் சூட்டி உள்ளேன். இந்த தொலைநோக்குத் திட்டங்கள் அனைத்தும் 10 ஆண்டு திட்டமாக படிப்படியாக செயல்படுத்தப்படும். 2031க்குள் நிறைவேற்றப்படும். இவை அனைத்தும் தனிப்பட்ட முக.ஸ்டாலின் திட்டங்கள் அல்ல. இவை தான் கோடிக்கணக்கான தமிழக மக்களின் திட்டங்களாக மாற வேண்டும்.  உங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த உறுதிமொழியை நான் எடுத்துக்கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்களின் ஆதரவோடு நாம் அமைக்கும் ஆட்சியானது இவற்றை நிறைவேற்றித்தரக்கூடிய ஆட்சியாக அமையும்.

 7 கோடி மக்களின் இதயங்களை வெல்வதன் மூலமாக இந்த 7 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி காட்ட முடியும். கழக ஆட்சி என்பது தனிப்பட்ட கட்சியின் ஆட்சியாக இல்லாமல், ஒரு இனத்தின் ஆட்சியாக அமையும். தனிப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் கொள்கையாக இல்லாமல் இந்த மனித சமுதாயத்தின் உயர்ந்த லட்சியங்களை அடையக்கூடிய ஆட்சியாக அமையும். தந்தை பெரியாரின் கனவுகளை, அறிஞர் அண்ணாவின் கனவுகளை, கலைஞர் கனவுகளை செயல்படுத்தும் கடமை எனக்கு உள்ளது. நம்மால் முடியும். நம்மால் மட்டும் தான் முடியும். வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சி பெற வைப்போம். இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளன. பரந்து விரிந்த இந்த தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் திமுக அரசு அமைய உள்ளது. அப்படி அமையும் அரசு தனிப்பட்ட ஸ்டாலினின் அரசாக மட்டும் அல்ல நம் அனைவருடைய அரசாக இருக்கும். இதற்கான உறுதிமொழியை நம் தமிழ் சமுதாயத்துக்கு முன்னால் நாம் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொள்வோம்.

தமிழ் பெருங்குடி மக்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்களில் ஒருவனாகிய மு.க.ஸ்டாலினாகிய நான், உங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முழுமையாக உறுதியளிக்கிறேன். நிச்சயம் நிறைவேற்றுவேன். இந்த உறுதிமொழியை தமிழக மக்களின் இதயங்களில் ஏற்றி வைக்கும் பெரும் பொறுப்பை உங்கள் தோள்களில் ஏற்றி வைக்கிறேன். ஒளிமயமான தமிழகத்தின் எதிர்காலத்தை அமைக்க பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக அறிவித்துள்ளது என்பதை தமிழக மக்களின் இதயங்களில் நீங்கள் விதைக்க வேண்டும். இன்று மார்ச் 7 தேர்தல் தேதி ஏப்ரல் 6 இடைப்பட்ட ஒரு மாதகாலத்துக்குள் கோடிக்கணக்கான தமிழக இதயங்களுக்கு இதை கொண்டு சேர்த்துவிட்டோம் என்றால், திமுக வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. வீடு வீடாக செல்லுங்கள்; கூட்டம் கூட்டமாக செல்லுங்கள்; தனியாக சென்றும் சந்தியுங்கள். தமிழக எதரி–்காலத்தை மனதில் வைத்து தீட்டப்பட்ட இந்த 7 திட்டங்கள் பற்றி எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழக எதிர்காலத்தை மனதில் வைத்து வாக்களியுங்கள் என்று சொல்லுங்கள் வாக்காளர்களிடம். இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல பேரழிவை நோக்கி செல்லும் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். முன்னேற்றப்பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் தேர்தலாக நாம் கருத வேண்டும். நாம் எடுத்துள்ள உறுதிமொழி 5 ஆண்டுக்கு மட்டும் அல்ல 10 ஆண்டுக்கும் சேர்த்து நான் சொல்லி உள்ளேன். இதை மட்டும் செய்தோம் என்று சொன்னால், இன்னும் எண்ணற்ற திட்டங்கள் உள்ளன. திமுகவின் ஆட்சி வெறும் 5 ஆண்டுகள் மட்டும் அல்ல தொடர்ந்து காலம் தோறும் தொடர்ந்தால் மட்டும் தான் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும். எனவே அதிமுக ஆட்சியை மாற்றுவற்காக மட்டுமே வாக்களிக்கும் தேர்தல் அல்ல இது. இனி தமிழகத்தில் எந்நாளும் திமுக ஆட்சி தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு வாக்களிக்கும் தேர்தல் இது.

அத்தகைய ஜனநாயக போர்களத்தில் நாம் மட்டும் அல்ல. நம்மோடு பல்வேறு அரசியல் கட்சிகள் தோள் கொடுக்க முன்வந்திருக்கின்றன. அவர்கள் தேர்தல் நேரத்து தோழமைகள் அல்ல. தொடர்ந்து நம்மோடு அனைத்து போராட்டங்களிலும் தோள்கொடுத்தவர்கள். ஜனநாயகம் காக்க மக்கள் உரிமைகள் காக்க ஊழலை எதிர்த்து நாம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்தவர்கள். அத்தகைய அரசியல் கட்சிகள் இந்த தேர்தல் களத்திலும் தோழமையோடு நம்மோடு இணைந்திருக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து பெரும்பாலும் பங்கீடுகள் என்பது இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது.

அடுத்தடுத்த கழக வேட்பாளர்கள் பட்டியல்; தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம். அதன் பின் என் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன். இதோ இன்று முதல் அதிமுக ஆட்சி முடிவதற்கான கவுன்ட் டவுண் துவங்கி விட்டது. இன்னும் முப்பதே நாளில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். திமுக ஆட்சிக்கு தொடக்கப்புள்ளி வைப்போம். கழக அரசு மலரட்டும் உங்கள் கவலைகள் யாவும் தீரட்டும். தமிழர்கள் வாழ்வு செழிக்கட்டும். விடைபெறுகிறேன். நன்றி, நன்றி, வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

உறுதிமொழி

மு.க.ஸ்டாலின் சொல்ல, பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி: அனைத்து உரிமைகளையும் கொண்டதாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம். மக்களை பிளவுப்படுத்தும் எவரையும் கூட்டாக எதிர்நின்று தோற்கடிப்போம். எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசை நடத்திக்காட்டுவோம். சட்டம் ஒழுங்கை உறுதியோடு காப்பாற்றுவோம். சட்டமீறல்களையும் குற்ற சம்பவங்களையும் இரும்பு கரம்கொண்டு அடக்குவோம். அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்போம். 100 சதவீதம் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்போம் இந்த உறுதி மொழிகளை எந்நாளும் காப்போம்.

Related Stories: