பிடிக்கிறாங்க... பிடிக்கிறாங்க... ஸ்டூடன்ஸை பிடிக்கிறாங்க...

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, 1,050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில், தற்போது வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், அங்கு வைக்கப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை முழுமையாக தேர்தல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அத்துடன், வாக்காளர்கள் சானிடைசரை பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனியாக பணியாளர்களை நியமிக்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, இப்பணியில் கல்லூரி மாணவர்களையும், தன்னார்வலர்களையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான கல்லூரி மாணவர்களை தேடிப் பிடிக்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முதல்நாள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும்போதே, மாணவர்களும், தன்னார்வலர்களும் அனுப்பப்படவுள்ளனர். முன்னதாக அனைத்து மாணவர்களுக்கும் இதுதொடர்பாக பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: