நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட சின்னம்மா ஆதரவாளர்கள்

சொத்துக்குவிப்பு வழக்கில் கிடைத்த சிறைத்தண்டனை காரணமாக, தனது முதல்வர் வேட்பாளர் கனவை, ஜெயலலிதாவின் சமாதியில் சத்திய பிரமாணம் என்ற பெயரில் ஓங்கி அறைந்துவிட்டு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்ற சசிகலா, போகும்போது எடப்பாடி பழனிசாமியை தனது காலடியில் தவழவிட்டு முதல்வராக்கி சென்றார்.  அதன் பிறகு அரசியல் காட்சிகள் மாறத்தொடங்க, அமமுகவை உருவாக்கிய தினகரன், அதன் மூலம் சசிகலாவை வைத்து அதிமுகவை மீட்கப்போவதாய் போர்க்கோலம் காட்டினார். இதனால் அவரது  பின்னால் அணிவகுத்த 18 எம்எல்ஏக்களின் பதவி காலியாக, அதற்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. பதவி பறிகொடுத்தவர்களில் பலர் பல கட்சிகளிலும் ஐக்கியமாக, தினகரன் பின்னால் அணிவகுத்தவர்கள் சின்னம்மா வெளியில் வந்தால் எப்படியும் இலை கட்சி நம்மிடம் வரும் என கனவுலகில் இருந்து வந்தனர்.  

அதற்கேற்ப சசிகலா வெளியில் வந்தும் ஒன்றும் நடக்காமல் போக, சசிக்கும், குக்கர் கட்சிக்காரருக்கும் உரசல்கள் வெடித்த நிலையில் அங்கு குக்கர்காரர், சின்னம்மா என இரண்டு கோஷ்டிகள் முளைத்தன. இதில் குக்கர்காரர் சின்னம்மா ஆதரவாளர்களிடம் இருந்த கட்சி பொறுப்புகளை பறித்து டம்மியாக்கினார். இந்த டம்மி பட்டியலில் இடம்பெற்ற பதவி போன பெண் எம்எல்ஏவான ஜெயமானவர் தனது ஆதரவாளர்களுடன் இலை கட்சியில் சங்கமமாக யோசித்து வருகிறாராம். இதனால் பார்ப்பவர்களிடம் எல்லாம், நான் ஒழுங்கா இலையிலேயே இருந்திருப்பேன். இப்ப பாரு, இங்க கட்சி பொறுப்பையும் பறிச்சிட்டு டம்மியாக்கிட்டாங்க. பார்க்கலாம், இலை கட்சியில முதலில் சேருவோம். அப்புறம் வாய்ப்பை பற்றி யோசிக்கலாம் என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.

Related Stories: