நெல்லை தொகுதி பாஜவுக்கு தாரை வார்ப்பா? : கடும் அப்செட்டில் அதிமுகவினர்

அதிமுக கூட்டணியில் நெல்லை சட்டமன்ற தொகுதி, பாஜவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் அதிமுகவினர் கடும் அப்செட்டாகி உள்ளனர். அதிமுக கூட்டணியில் நீண்ட பேச்சுவார்த்தை இழுபறிக்கு இடையே பாஜவுக்கு 20 சீட் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கேட்ட எண்ணிக்கையை விட குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டாலும், கேட்ட ெதாகுதிகளை தர அதிமுக சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பாஜவினரை உற்சாகமடைய செய்தாலும், அதிமுகவினரை கடும் அப்செட்டில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே வேட்பாளர் கனவில் பல கோடி செலவு செய்துள்ள அதிமுக நிர்வாகிகள், தங்களது தொகுதி தாரை வார்க்கப்படுவதால் உள்ளடி வேலைக்கும் தற்போதே தயாராகி வருகின்றனர். இதற்காக ஆதரவாளர்களை திரட்டும் பணியையும் துவங்கி இருக்கின்றனர்.

அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் இணைந்து மாநில துணை தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனுக்கு நெல்லை சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. தனக்குத்தான் நெல்லை என்ற நம்பிக்கையில் அவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பணிகளை தொடங்கி பாஜ நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான குஷ்புவை அழைத்து வந்து மினி பிரசார பயணத்தையும் முடித்துள்ளார். நெல்லை சந்திப்பில் உள்ள தனது ஓட்டலில் தேர்தல் அலுவலகத்தையும் அமைத்துள்ளார். இந்த அலுவலகம் திறப்பு விழா காணவில்லை என்றாலும் தேர்தல் அலுவலகமாகவே செயல்பட்டு வருகிறது. நயினாரின் இந்நடவடிக்கை, ஏற்கனவே நெல்லை தொகுதியில் களமிறங்க ஆர்வமாக பணியாற்றி வந்த அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் தற்போது பாஜவுக்கான தொகுதியில் நெல்லை தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக வெளியான தகவல்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகளை மேலும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் அதிமுக தலைமை  நிர்வாகிகள் மூலம் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நெல்லை அதிமுகவினர், ‘நெல்லையில் அதிமுக தான் களமிறங்க வேண்டும். நெல்லை தொகுதியில் அதிமுக மீதோ, கட்சியினர் மீதோ மக்களுக்கு பெரிதாக எதிர்ப்புகள் இல்லை. இதை கணக்கில் கொண்டே கடந்த சில மாதங்களாக பல கோடிகளை செலவு செய்து பணிகளை செய்துள்ளோம்.

தற்போது தொகுதியை விட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்காது’ என வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்டத்தின் தலைநகர தொகுதியை கூட்டணிக்கு தரக்கூடாது என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர். அதிமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை, எவை என்ற பட்டியல் வெளியாகும் முன்பே உள்ளடி வேலைக்கான பணிகள் நீருபூத்த நெருப்பாக பற்றி எரிவதால், ஓரிருநாளில் தொகுதிகள் விவரம் வெளியாகும்போது மேலும் பல களேபரங்கள் நடக்கக் கூடுமென கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: