×

சத்துணவு திட்டத்தில் ‘அட்டைபோல்’ உறிஞ்சிய அரசு முட்டை கொள்முதலில் மெகா வேட்டை: 5 ஆண்டில் ரூ.500 கோடிக்கு மேல் சுருட்டிய அவலம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 41 ஆயிரம் சத்துணவு  மையங்கள் உள்ளன. 1.27 லட்சம் பணியாளர் இருக்க வேண்டிய நிலையில், 30 ஆயிரம் காலி பணியிடம் போக, 97 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த, 55 லட்சம் மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிடுகின்றனர். தற்போது கலவை சாதத்துடன், தினசரி முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், கடந்த 2006 - 2011ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வாரம் 5 முட்டையாக உயர்த்தப்பட்டது. திமுக ஆட்சியின்போது, சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்ய, மாவட்டம் வாரியாக டெண்டர் நடத்தப்பட்டு குறைந்த விலைக்கு அரசு முட்டை வாங்கி வந்தது. அதுவும் நேரடியாக நாமக்கல் கோழி பண்ணை உரிமையாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன்மூலம் நாமக்கல் பகுதியில் உள்ள கோழி பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது.

ஆனால் கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த டெண்டர் முறை மாற்றப்பட்டு, மாநில அளவில் ஆண்டுக்கு ஒரே டெண்டர் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. இதில் நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் பங்கேற்க முடியாத அளவுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதன்மூலம் 2 கான்ட்ராக்டர்களுக்கு மட்டுமே முட்டை சப்ளை செய்யும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஒரு முட்டையை தமிழக அரசு ரூ.4.36 காசுக்கு கொள்முதல் செய்தது. ஆனால் நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் அந்த ஆண்டில் சராசரியாக ஒரு முட்டை விலையை 320 முதல் 330 காசுகள் வரை தான் விற்பனை செய்து வந்தனர். ஆனால் தமிழக அரசு ஒரு முட்டைக்கு கூடுதலாக 1 ரூபாய் வைத்துக் கொள்முதல் செய்தனர். இதில் பல கோடி ஊழல் நடைபெற்றது.

இதன்மூலம் சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்வதில், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டது. அதே நேரம் அந்த பணம் சத்துணவு அமைச்சருக்கு மட்டுமல்லாமல் ஆட்சியை வழிநடத்தி சென்றவர்கள் முதல் உயர் அதிகாரிகள் பலருக்கு பல கோடி ரூபாய் கமிஷனாக சென்றது. அதிக விலை கொடுத்து முட்டை வாங்குவதால் பல மட்டத்தில் ஊழல் நடக்கிறது என்று  நாமக்கல்லில் நடைபெற்ற பிரசார கூட்டத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதன்படி கடந்த 5 ஆண்டில் சத்துணவு முட்டை திட்டத்தில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முட்டை ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தற்போது மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் கூறுகையில், ‘’சத்துணவு திட்டத்துக்கு சப்ளை செய்யப்படும் முட்டைகள் புல்லட் முட்டையாகும். இந்த எடை குறைந்த முட்டைகளைத் தான் சத்துணவுக்கு கான்ட்ராக்டர்கள் வாங்கி செல்கின்றனர். இதை கண்டுகொள்ளாமல் இருக்க அரசு அதிகாரிகள் கவனிக்கப்படுகின்றனர். சத்துணவு முட்டை வாங்குவதில் மட்டும் ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. முட்டை ஊழல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே இருந்தபடி, மாவட்ட வாரியாக முட்டை டெண்டர் நடத்தப்பட்டு, தமிழக அரசு கொள்முதல் செய்தால் யாருக்கும் இழப்பு ஏற்படாது’’ என்றனர்.

சத்துணவு முட்டை டெண்டர் விதிப்படி அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் விநியோகம் செய்யும்போது முட்டை ஒன்றின் எடை 45 முதல் 52 கிராம் நிகராமல் இருக்க வேண்டும். சராசரி 10 முட்டைகளின் எடை 445 கிராம் முதல் 525 கிராம் வரை இருக்க வேண்டும். அக்மார்க் தரத்தில் ஏ மீடியம் ரக முட்டைகளாகவும், சுத்தமாகவும், பாக்டீரியா மற்றும் கிருமிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளில் மாறுபாடு கண்டறியப்பட்டால் இரட்டிப்பு தொகை வழங்க வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு விற்கப்படும் முட்டைகளில் இருந்து அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக சத்துணவு கூடங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் நீல நிறத்தில் சீல் வைத்து வழங்கப்படுகின்றன. சமீபகாலமாக அரசு முத்திரை வைக்கப்பட்டுள்ள சத்துணவு கூடங்களுக்கான முட்டைகள் வெளிசந்தைகளிலும், சில்லரை விற்பனை கடைகளிலும் தாராளமாக கிடைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சத்துணவு மையங்களுக்கு வாங்கப்படும் முட்டைகள் எப்படி கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன என்பது பற்றி கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சத்துணவு மையங்களுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும் தேவையான முட்டைகளை சப்ளை செய்ய திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி சராசரியாக 30 முதல் 40 கிராம் எடையுள்ள முட்டைகளை ஒரு ஆண்டுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள் சத்துணவு சாப்பிட வருவது குறைவாக இருக்கும். ஆனால் வருகை பதிவேட்டில் அதிகம் பேர் சாப்பிடுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்படி மிச்சமாகும் முட்டைகள் கடைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதும் தெரியவந்துள்ளது.

இதுதவிர முட்டைகளை எடுத்துச் செல்லும்போது கணிசமான அளவு முட்டைகள் சேதம் ஆவது உண்டு. அந்த முட்டைகளையும் வெளியில் உள்ள கடைகளுக்கு கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் முட்டைகளில் வைக்கப்பட்டுள்ள அரசு முத்திரையை ரசாயனம் கொண்டு அழித்து விற்பதாகவும் தெரிய வந்துள்ளது. சென்னை உள்பட சில நகரங்களில் சமீபகாலமாக சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் சீல் அழிக்கப்படாமலேயே கடைகளுக்கு விற்பனைக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அங்கன்வாடி மையம் மற்றும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகள் அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்த முட்டையை காட்டிலும் சிறிய அளவில் குறைந்த எடையில் முட்டைகள் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் உடல் நலனுக்காக அரசு வழங்கும் முட்டையில் முறைகேடு செய்வதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே முட்டை வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்துணவு குழந்தைகளுக்கு வாங்கும் முட்டையில் ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை ஊழல் நடைபெறுவதற்கு காரணம், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு மட்டும் டெண்டர் வழங்கப்படுவதுதான். இந்த நிறுவனம் தமிழக அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி புகார் வந்ததால், சில கோழி பண்ணையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து 2018ம் ஆண்டு நடைபெற இருந்த முட்டை கொள்முதல் டெண்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பழைய முறையிலேயே, அந்தந்த மாவட்ட அதிகாரிகளே சத்துணவுக்கு தேவையான முட்டையை கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி, சென்னையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில், மாநில அளவிலான டெண்டர் விடப்பட்டது. இதில், பல்வேறு மாவட்ட கோழி பண்ணையாளர்களும் பங்கேற்றனர். மாவட்ட வாரியாக டெண்டர் எடுத்தோர், செவ்வாய்,  வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த யூனியன் அலுவலகத்துக்கு முட்டையை அனுப்பி விட வேண்டும். அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும், யூனியன் அலுவலகம் சென்று முட்டையை வாங்கிக்கொண்டு, மையத்துக்கு செல்ல வேண்டும். சத்துணவு முட்டையானது, தலா 45 முதல் 52 கிராம் வரை இருக்க வேண்டும். 12 முட்டைகளை ஒரே சமயத்தில் எடை போட்டால் 552 கிராம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

முட்டையில் கலப்படம், தரமற்றவை, கலாவதியானது ஆகியவற்றை அறிய பல வண்ணத்தில், `இங்க்’ பதிவு செய்து, சப்ளை செய்யப்பட்டது. தமிழக அரசு, ஒரு முட்டைக்கு, 4.58 ரூபாய் வழங்கியது. அதில், 10 கி.மீ.,க்கு குறைவாக இருந்தால் 8 காசு, அதிகமாக இருந்தால் 10 முதல் 15 காசு வரை டிரான்ஸ்போர்ட் கட்டணம் வழங்கியது. நேரடி முட்டை வினியோகத் திட்டம் நடைமுறைக்கு வருவதை வரவேற்பதாக சத்துணவு அமைப்பாளர்களும் கூறினர். இந்த நிலையில், முட்டை கொள்முதல் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து மீண்டும் மாநில அளவில் முட்டை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது. தற்போதும் இது நடைமுறையில் இருந்து வருவதுடன், வழக்கமான ஊழலுக்கும், முறைகேட்டுக்கு மீண்டும் வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* பள்ளிகளை மூடியும் முட்டை சப்ளை
கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு திட்டத்தின் மூலம் மாணவ - மாணவிகளுக்கு பள்ளியில் சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டது. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கவும், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும் என்று தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம், மாணவ - மாணவிகளை தினசரி பள்ளிக்கு வரவழைத்து முட்டை வழங்க முடியாது. அதனால் மாதத்திற்கு 10 முட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு, மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு மாதம் இருமுறை தலா 10 முட்டை வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டது. தற்போது அதன்படி முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

* நேரடி கொள்முதல்
தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘சத்துணவு குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் ஆர்டரை கோழி பண்ணையாளர்கள் நேரிடையாக கொடுத்தால் அரசு நிர்ணயிக்கும் சரியான எடை அளவுடன், தற்போது அரசு வாங்கும் விலையைவிட 100 காசு வரை குறைவாக முட்டை வழங்க முடியும். ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தினர் முட்டைகளை குடோனில் வாங்கி ஸ்டாக் வைத்து, பிறகு பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அப்படி வழங்கப்படும் முட்டைகள் கெட்டு விடுகிறது. மேலும் அரசு நிர்ணயித்த அளவை விட சிறியதாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இதனை தவிர்க்க, கடந்த திமுக ஆட்சியில் இருந்தது போன்று, கோழி பண்ணையாளர்களிடம் சத்துணவு திட்டத்துக்கான முட்டையாக அரசு நேரிடையாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

* தமிழகத்தில் சத்துணவு மையங்கள் 41,000
* பணியாளர்கள் 97,000
* காலி பணியிடங்கள் 30,000
* தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு முட்டை உற்பத்தி சராசரியாக 3 கோடி
* கேரளாவுக்கு அனுப்பப்படுவது 1 கோடி
* தமிழகத்தில் விற்பனைக்கு அனுப்புவது 1.5 கோடி
* சென்னையில் விற்பனை 40 லட்சம்

* தடை செய்யப்பட்ட நிறுவனத்துக்கு அனுமதி
தமிழக அரசு முட்டை கொள்முதல் செய்யும் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் தமிழக அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. முட்டை மட்டும் அல்லாது, சத்துமாவு, ரேஷன் கடைகளுக்கு பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களையும் சப்ளை செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், 2012ம் ஆண்டு கர்நாடகாவில் அங்கன்வாடி மையங்களுக்கு தரமில்லாத சத்துமாவு சப்ளை செய்ததாக லோக்ஆயுக்தாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்தான் 2018ம் ஆண்டு கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தினர் தமிழகத்தில் முட்டை கொள்முதலில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 75 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பணம் கொடுத்த ஆவணங்களும் சிக்கியதாக கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசின் தயவால் வெளிவராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

* அதிகபட்ச விலையை நிர்ணயித்து மோசடி
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைக்கு என்இசிசி என்ற அமைப்பு முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. இந்த விலையில் இருந்து 50 காசு குறைவாகத்தான், சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்யும் கான்டிராக்டர்கள் நாமக்கல் கோழி பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். அரசின் முட்டை கொள்முதல் விலைக்கும், நாமக்கல்லில் வாங்கப்படும் முட்டை விலைக்கும் ரூ.1.50 வரை வித்தியாசம் ஏற்படுகிறது. இதன்மூலம் முட்டை ஊழலில் பலருக்கு தொடர்பு இருக்கிறது அம்பலமாகியது. என்இசிசியின் ஆண்டு சராசரி விலையை கணக்கில் எடுத்து கொள்ளாமல், ஒரு ஆண்டில் எப்போதாவது வரும் அதிகபட்ச விலையை மட்டும் கணக்கில் வைத்து, தமிழக அரசு சத்துணவு திட்டத்துக்கு முட்டையை கொள்முதல் செய்து வருகிறது. என்இசிசி அமைப்பிலும் முட்டை விலையை நிர்ணயம் செய்வது குறிப்பிட்ட சில பண்ணையாளர்களும், வியாபாரிகளும் தான். அவர்கள் முட்டை கான்டிராக்டர் எடுக்கும் நபர்களுக்கு ஆதரவாக, டெண்டர் நடைபெறும் சமயத்தில் முட்டை விலையை உயர்த்துவதும், பின்னர் குறைப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.

* தினசரி 3 கோடி முட்டை
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அதில் சுமார் 1 கோடி முட்டைகள் கேரளா மாநிலத்திற்கு சென்று விடுகிறது. சுமார் 52 லட்சம் முட்டைகள் மதிய உணவு திட்டத்திற்காக தமிழக அரசு வாங்குகிறது. மீதமுள்ள சுமார் 1½ கோடி முட்டைகள் தமிழக மக்களின் நுகர்வுக்காக செல்கிறது. இதில் சென்னையில் மட்டும் சுமார் 40 லட்சம் முட்டைகள் விற்பனையாகிறது.

Tags : Mega poaching in government egg procurement sucked like 'card' in nutrition scheme
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...