×

ஏக் காவுமே ஏக் கிஸான் ரஹதாத்தா...: மதுரை மக்களிடம் பாஜ இந்தியில் பிரசாரம்

மதுரைக்கு வந்திருந்த மத்திய இணை அமைச்சரும் முன்னாள் ராணுவ ஜெனரலுமான வி.கே.சிங், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நிகழ்ச்சியில் பாஜ சார்பிலான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினர் சிலருடன், பொதுமக்களே அதிகமிருந்தனர். தமிழில் ‘வணக்கம்’ என்றவர், இந்தியில் சகட்டுமேனிக்கு பேசிக் கொண்டே போனார். ராணுவ வீரர்கள் குடும்பத்தினரும், பொதுமக்களும் இந்தி புரியாமல் ‘என்னப்பா இவர்... நம்மளை திட்டுறாரா? பாராட்டி பேசுறாரா’ என ஒன்றுமே புரியாமல் மண்டை காய்ந்தனர்.

சூழலை புரிந்து கொண்ட பாஜ கட்சியினர், அரைகுறையாக இந்தி தெரிந்தவரை மொழி பெயர்ப்பாளர் போல நிற்க வைத்துள்ளனர். சிங் நீட்டி முழக்கிய பேச்சை, திருக்குறள் போல ஒண்ணே முக்கால் வரியில் மொழி பெயர்ப்பாளர் முடித்ததால், அமைச்சர் என்ன பேசினார் என சரியாக புரியாமலே மக்கள் கிளம்பி சென்றனராம். ‘ஒரு இந்தி படத்தைப் பார்த்தது மாதிரி இருக்குங்க...’ என அமைச்சருடன் வந்த பாஜவினரே கமெண்ட் அடித்து சிரித்தது உச்சக்கட்ட காமெடி. பாஜவின் இந்த ‘ஏக் காவுமே’ ஸ்டைல் பிரசாரத்தை, தமிழகம் முழுவதும் இனி கேட்டு மகிழலாமோ...?

Tags : Madurai, BJP, Hindi, propaganda
× RELATED பாஜ பிரசாரத்தில் கமல் பாடல்