சுடுகாட்டை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை கண்டித்து மறியல்

தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள சுடுகாட்டை அகற்ற முயன்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் சித்தேரி அமைந்துள்ளது. இதை சீரமைக்கும் பணியில் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஏரியின் அருகே உள்ள சுடுகாட்டை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, நேற்று முன்தினம் மாலை சுடுகாட்டை அளப்பதற்காக பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் அங்கு வந்தனர்.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் திரண்டு, சுடுகாடு அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுப்பணி துறை அதிகாரிகளை கண்டித்து, சந்தோஷபுரம் - வேங்கைவாசல் சாலை சந்திப்பில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்கள் ‘‘வேங்கைவாசல் ஊராட்சிக்குட்பட்ட சந்தோஷபுரத்தில் உள்ள சுடுகாட்டை நாங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றோம்.

இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய இங்கு வேறெந்த சுடுகாடும் கிடையாது. அனைத்து மதத்தினருக்கும் ஒரே சுடுகாடாக இருந்ததால், பிரச்னை ஏற்படக்கூடாது எனக் கருதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தனித்தனியே சுடுகாடு அமைக்க கடந்த 2006-ம் ஆண்டில், வேங்கைவாசல் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து, முஸ்லிம் மதத்தினருக்கான சுடுகாட்டை சுற்றி, மதில்சுவர் கட்டப்பட்டுள்ளது. மற்ற 2 சுடுகாடுகளும் மதில்சுவர் இன்றி உள்ளது. எனவே, இந்த சுடுகாட்டை அகற்ற கூடாது. இதில்,  மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’  என்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடரந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சந்தோஷபுரத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தனித்தனியே சுடுகாடுகள் பிரித்து வேங்கைவாசல் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறுகின்றனர். ஆனால், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு இடத்திற்கு ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது, ஆனால், அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர். இந்த 3 சுடுகாடுகளும் தனித்தனியே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இடம் உள்ளது. மேலும், அவர்கள் வருங்காலத்தில் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதற்காக, தற்போது சுடுகாடு உள்ள பகுதியை சுற்றிலும் மதில்சுவர் கட்ட திட்டமிட்டு இருக்கிறோம். ஆனால், அதற்குள் இப்பணிகளை செய்யக்கூடாது என மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். எனவே, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்வோம்’’  என்றார்.

Related Stories:

>