×

தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் தபால் வாக்களிக்க பட்டியல் தயாரிப்பு

வேலூர்: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை புழல், வேலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய சிறைகளும், வேலூர், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் பெண்கள் தனிச்சிறைகளும் உள்ளன. இவற்றில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் யாரும் வாக்களிக்க முடியாது. ஆனால், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க முடியும். அவர்கள் தபால் வாக்கு அளிப்பது வழக்கம்.

அந்த வகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டர் சட்ட கைதிகளில் வாக்குரிமை செலுத்த விரும்புவோர் பட்டியல் அந்தந்த சிறைத்துறை அதிகாரிகள் மூலம் அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து தேர்தல் பிரிவு அலுவலர்கள், சம்பந்தப்பட்ட கைதியின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்ப்பார்கள். அதன்படி தகுதியான கைதிகள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். முன்னதாக கைதிகள் தபால் வாக்கு அளிக்க தேர்தல் சிறப்பு அலுவலர்களால் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக சிறைகளில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அந்த பட்டியல், அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Tamil Nadu , Preparation of voter list for those arrested under the Gangs Act imprisoned in Tamil Nadu
× RELATED தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு...