வாடகை தகராறு காரணமாக துணி கடையை எரித்த 5 பேர் கைது: கட்டிட உரிமையாளருக்கு வலை

சென்னை: சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 1வது தெருவில் உள்ள பெட்ரம் ஸ்வாரிஸ் (53) என்பவரின் துணி துணியில், கடந்த ஜனவரி 4ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு தீவித்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கடையில் இருந்த ஏராளமான துணிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பெட்ரம் ஸ்வாரிஸ் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கடை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் சாகுல் அமீது மகன் நிஜாம் மீது சந்தேகம் உள்ளது, என்று தெரிவித்து இருந்தார். முதற்கட்ட விசாரணையில், கடை வாடகை தொடர்பாக பெட்ரம் ஸ்வாரிஸ் மற்றும் நிஜாம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இங்கு ஓட்டல் வைக்க உள்ளதால், கடையை காலி செய்யும்படி நிஜாம் கூறியுள்ளார். ஆனால், உடனே காலி செய்ய முடியாது, என பெட்ரம் ஸ்வாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நிஜாம், ஓட்டல் நடத்த இடம் கேட்ட ராஜேசுடன் திட்டமிட்டு, நண்பர்களான சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த ராமராஜ் (31), ஆனந்தன் (31), பாலாஜி (31), சந்துரு (எ) சந்திரகுமார் (21), ராம்கி (எ) ராமகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து, துணிக்கடையில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸாஸ் பேன் வழியாக பெட்ரோல் ஊற்றி தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையை தீ வைத்து கொளுத்திய ராஜேஷ் அதற்கு உதவிய ராமராஜ், ஆனந்தன், பாலாஜி, சந்துரு ஆகிய 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான கட்டிட உரிமைளாளர் நிஜாம் மற்றும் ராம்கி ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: