தேசம் முழுவதையும் கைப்பற்றுவதே இலக்கு தென் மாநிலங்களில் பாஜ ஆட்சி அமைப்பது பெரும் சிரமம்: நாகர்கோவிலில் அமித்ஷா பேச்சு

நாகர்கோவில்: தென் மாநிலங்களில் பாஜ ஆட்சி அமைப்பது மிகப்பெரிய சிரமமாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் பேசினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஹெலிகாப்டரில் நாகர்கோவில் மறவன் குடியிருப்புக்கு வந்தார். பின்னர் காரில் சுசீந்திரம் சென்று, தாணுமாலயசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். ரத வீதிகளில் 5 வீடுகளில் மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய நோட்டீஸ்களை விநியோகம் செய்தார். பின்னர் நாகர்கோவில் நீலவேணி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து திறந்த வாகனத்தில் ஏறி ரோடு ஷோவில் பங்கேற்றார்.

தமிழக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ. தலைவர் முருகன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சுமார் 1 கி.மீ. தூரம் திறந்த வாகனத்தில் அவர் பிரசாரம் செய்தார். வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வடசேரி உடுப்பி இன்டர்நேஷனல் ஓட்டலில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

தமிழகத்தில் அதிமுக - பாரதிய ஜனதா கூட்டணி  நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.  இந்தியாவிலேயே நல்ல மாநிலம் தமிழகம். இந்த தேசம் முழுவதும் பாரதிய ஜனதா ஆட்சி  நிறைந்திருக்க வேண்டும். இது தான் நமது இலக்கு.  மேற்கு வங்காளம்,  ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி என அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.  கட்சி, என்றைக்கு ஆட்சிக்கு வருகிறதோ அன்றைக்கு தான் அந்த இலக்கை நாம்  அடைந்ததாக கருத முடியும். வடகிழக்கு மாநிலங்களில் நாம் ஆட்சியை பிடித்து உள்ளோம். ஆனால்  தென்னிந்தியாவில் ஆட்சி அமைப்பது மிகப் பெரிய சிரமமாக அமைந்திருக்கிறது.  இதற்காக நாம் துவண்டு விடவில்லை. வரக்கூடிய தேர்தலில் நிச்சயமாக இது  நிறைவேறும். மேற்கு வங்கத்தில் 200 சீட்டுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.  கட்சி, என்றைக்கு ஆட்சிக்கு வருகிறதோ அன்றைக்கு தான்  இலக்கை நாம்  அடைந்ததாக கருத முடியும்.

Related Stories: