உலக மகளிர் தினம் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): மகளிர் நாள் நூற்றாண்டுகளை கடந்த வரலாறு கொண்டதாகும். ஒரு காலத்தில் மகளிர் இரண்டாம் தர குடிமக்களாகவும், அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர். கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சமையலறைகள் மட்டும் தான் அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்தன. ஆனால், அதன்பின் சட்ட போராட்டங்களாலும், உரிமை போராட்டங்களாலும் அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக உரிமை பெற்றனர்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெண்களுக்கு நாம் வழங்க வேண்டிய அங்கீகாரங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. பெண்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்குமான உரிமையை வென்றெடுத்துத் தர வேண்டிய ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமை ஆகும். அதற்காக போராட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

அன்புமணி (பாமக இளைஞரணி செயலாளர்): உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். மகளிருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களின் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இதை உணர்ந்து மகளிருக்கு அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக உழைப்பதற்கு இந்நாளில் உறுதியேற்க வேண்டும். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில், மக்களவை சபாநாயகராக மீராகுமார் ஆகியோரை பதவியில் அமர்த்தியதில் காங்கிரஸ் கட்சிக்கு முழு பங்கு உண்டு.

இதன்மூலம் மகளிரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் எப்போதுமே காங்கிரஸ் கட்சி முனைப்பாக இருந்து செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதன் மூலமே மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். மகளிரின் உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாக சுயசார்புகளை அடைவதன் மூலமே அவர்களின் வாழ்வு ஏற்றம் பெற முடியும். இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியாக இருக்க முடியும்.

Related Stories: