இயற்கையுடன் இளைப்பாற, மரங்களை கட்டியணைக்க வன சிகிச்சை மையம் உத்தரகாண்டில் புதுமை: நாட்டில் முதல்முறை

டேராடூன்: மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் வகையில், வன சிகிச்சை மையத்தை உத்தரகாண்ட் அரசு அமைத்துள்ளது. ஜப்பான் போன்ற நாடுகளில், ‘பாரஸ்ட் பாத்திங்’ என்ற வனக்குளியல் பிரபலமாக உள்ளது. அதனை மையமாகக் கொண்டு 13 ஏக்கர் பரப்பளவில் வன சிகிச்சை மையம் இந்த அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்படும் முயற்சி இது. இந்த மையத்தை சுற்றுச்சூழல் ஆர்வலரான ஜோகிந்தர் பிஷ்ட் திறந்து வைத்துள்ளார்.மரங்களைக் கட்டியணைக்கவும், பசுமையான புல்வெளிகளில் வெறும் கால்களில் நடக்கவும், தரைகளில் படுத்து இளைப்பாறவும், உயர்ந்த மரங்களையும், மாறிக்கொண்டிருக்கும் ஆகாயத்தை கவனிக்கவும் இதில் அறிவுறுத்துகிறார்கள்.

இங்கு பொதுமக்களுக்கு வழிகாட்ட ஆங்காங்கே போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இயற்கையுடன் நேரடி தொடர்பு கொள்வதை தொந்தரவு செய்யும் செல்போன்கள், கேமராக்கள் போன்றவற்றை வெளியிலேயே விட்டுச் செல்வது நல்லது என்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் பதிவேடு ஒன்றும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. தியானம் செய்வதற்காக அழகான சின்னச்சின்ன மரக்கட்டைகளைக் கொண்டு சிறு குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பைன் மரங்கள் இந்த வனத்தில் அதிகம் வைக்கப்பட்டுள்ளன. இந்த பைன் மரங்கள் பைடோன்சைட்ஸ் என்ற எண்ணெய்த்தன்மை கொண்ட வேதிப்பொருளை வெளியிடுகிறது. இந்த பைடோன்சைட்ஸ் ரத்தத்தை சுத்தம் செய்வது, நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பது, எதிர்ப்பு சக்தியை வளர்ப்பது, புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது போன்ற அபாரமான செயல்களைச்  செய்கின்றன. இது பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் மன அழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன்களையும் பைன் மரங்கள் கட்டுப்படுத்தி ரிலாக்ஸான மனநிலையை உருவாக்குகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

* மரங்களைக் கட்டியணைத்தால்…

‘மரங்களைக் கட்டியணைக்கும்போது அதன் மூலக்கூறு அதிர்வலையின் தன்மை நமக்குள் ஆக்சிடோசின், செரோட்டோனின், டோப்பமைன் போன்ற ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்’ என்கிறார் உத்தரகாண்ட் வனத்துறையின் தலைமை அதிகாரியான சதுர்வேதி.

Related Stories: