ரூ.1,500 கோடி மோசடியில் அரசு ஊழியர்கள் உட்பட 24 பேர் கைது: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம், சைபராபாத் காவல்துறை கமிஷனர் சஜ்ஜனார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த அபிலாஷ் தாமஸ் மற்றும் பிரேம்குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஒரு கும்பலை ஏற்பாடு செய்துள்ளனர். பெங்களூருவை மையமாக கொண்டு சிந்து விவா ஹெல்த் சயின்சஸ் என்ற பெயரில் சங்கிலி முதலீட்டு தொழிலை தொடங்கியுள்ளனர். அந்த நிறுவனத்தில் ரூ.12,500 செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அறிவித்துள்ளனர். மேலும் சங்கிலி தொடராக மற்றவர்களையும் சேர்த்து தலா ரூ.12,500 செலுத்தினால், லாபம் ஈட்ட முடியும் என மக்களை நம்ப வைத்துள்ளனர். அவ்வாறு, இதுவரை ரூ.10 லட்சம் பேரை மோசடி செய்து ரூ.1,500 கோடியை வசூல் செய்துள்ளனர். இதுகுறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு கச்சிபவுலி போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி கும்பலை கைது செய்து, அவர்களுக்கு சொந்தமான பல வங்கி கணக்குகளில் இருந்து ரூ.20 கோடியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் தெலங்கானாவை சேர்ந்த 3 அரசு ஊழியர்கள், அவர்களது மனைவிகளும் உள்ளனர். அவர்கள் தங்கள் பணியிலிருந்து விடுப்பு எடுத்து பல மோசடிகளை செய்து வந்துள்ளனர். மேலும், இந்த மோசடியில் மூதலீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான நிறுவனத்தின் தலைவரை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: