×

4ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு தீவிரம்

* தொண்டர்கள் அதிருப்தி
* இன்றைக்குள் முடிவு வரவில்லை எனில் தேமுதிகவை கழற்றி விட முடிவா?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. வரும் 10ம் தேதி திமுக வேட்பாளர்கள் பட்டியல், 11ம் தேதி தேர்தல் அறிக்கையையும் திமுக வெளியிடுகிறது. ஆனால், ஆளும் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையில் மட்டும் இழுபறியாக இருக்கிறது. ஆரம்பத்தில் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் திருப்தியடைந்த பாமக 23 சீட் வாங்கிக்கொண்டு சென்று விட்டது. அதே நேரத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு 40 சீட் கேட்டு பிடிவாதம் பிடித்த பாஜவுக்கு 20 சீட் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக உடனான தொகுதி பங்கீடு செய்வது குறித்து கடந்த 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஒருபுறம் தமாகா, மறுபுறம் தேமுதிகவுடன் கூட்டணி இறுதி செய்ய முடியாத நிலையில், வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, பிரசாரத்தை துவக்குவது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அதிமுக சார்பில் தேமுதிக உடன் நேற்றுமுன்தினம் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அதிமுக சார்பில் கேபி.முனுசாமி தலைமையில் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்களும், தேமுதிக சார்பில் கே.பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், அக்பர் உள்ளிட்ட பலர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி நிருபர்களிடம் கூறுகையில், தேமுதிக சார்பில் 25 சீட் கேட்டோம். இப்போது 20 சீட், ஒரு ராஜ்யசபா எம்பி சீட் என்று இறங்கி வந்திருக்கிறோம். அதிமுகவும் இறங்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார். ஆனால், அதிமுக சார்பில் 13 முதல் 15 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி தரப்படும் என்று கூறியுள்ளது. அதே போன்று தமாகா தனிச்சின்னம் என்றால் 3 சீட் எனவும், இரட்டை இலை சின்னம் என்றால் 6 சீட் எனவும் அதிமுக தரப்பில் கூறி வருகிறது. இதனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஆனாலும், இன்றைக்குள் தேமுதிக, தமாகா உடன் முடிவு எட்டப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, பிரசாரம் மேற்கொள்வது, வேட்புமனு தாக்கல் செய்வது என ஏகப்பட்ட வேலைகள் உள்ளது. ஆனால், 10 நாட்களாக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. அதற்கு, தேமுதிக கட்சி தலைமை தான் காரணம். அந்த கட்சி சார்பில் ஒரு புறம் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போது, மறுபுறம் 234 தொகுதிக்கு நேர்காணல் நடத்தி வருகின்றனர். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் போது தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ் அதிமுகவை தரக்குறைவாக பேசி வருகிறார். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வாய்க்கு வந்தபடி அதிமுகவை பேசுகிறார். நாங்கள் கூட்டணி தர்மத்துக்காக வேறுவழியின்றி சகித்து கொண்டிருக்கிறோம்.

கடந்த 2011ல் தேமுதிக கட்சி பலமாக இருந்தது. அப்போது, அதிமுகவுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு பேசி கொண்டிருக்கும் போதே சண்டை போட்டு கொண்டு சென்று விட்டார். அதன்பிறகு அவர் தனியாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார். அந்த சமயத்தில் ஜெயலலிதா உருவப்பொம்மையை எரித்தனர். ஆனாலும், அதிமுக மூத்த நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதால், ஜெயலலிதா தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதன்பிறகு 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க விரும்பவில்லை. அவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டதால் கூட்டணிக்கு அழைத்த கட்சி கூட கழற்றி விட்டது. அந்த தேர்தலில் வேறுவழியின்றி 3வது அணி அமைத்து தேமுதிக ேதர்தலை சந்தித்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கொடுத்த அழுத்தம் காரணமாக தேமுதிகவை மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர்த்து கொண்டோம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவுக்கு 2011ல் இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. அக்கட்சிக்கு தொண்டர்கள் பலமும் இல்லை. இதனால், தற்போது அந்த கட்சிக்கு 15 சீட் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த கட்சி நிர்வாகிகள் எங்களின் பொறுமையை ேசாதித்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் விரைவில் முடிவு எடுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து கழற்றி விட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்த வேலைகள் இருப்பதால் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே சென்றால் தேர்தல் பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. தேமுதிக நடவடிக்கையால் அதிமுக மட்டுமின்றி தேமுதிக தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. எனவே அதிமுக, தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.

Tags : AIADMK , No decision was reached in the 4th round of talks AIADMK - Temujin block allocation intensity
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...