×

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் சென்னையில் ஏப்.9ல் தொடக்கம்: பிசிசிஐ அறிவிப்பு

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன் அடுத்த மாதம் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான தொடர் இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார். நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் முதல் லீக் ஆட்டம் சென்னை எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. பிளே ஆப் சுற்றுகள் மற்றும் இறுதிப் போட்டி (மே 30) அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இதில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 56 லீக் ஆட்டங்கள் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, மும்பை என 6 நகரங்களில் நடத்தப்பட உள்ளன. போட்டிகள் பிற்பகல் 3.30 மற்றும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூருவில் தலா 10 லீக் ஆட்டங்களும், அகமதாபாத் மற்றும் டெல்லியில் தலா 8 லீக் ஆட்டங்களும் நடைபெறும். அனைத்து அணிகளுமே பொதுவான மைதானங்களில் மோதவுள்ளன. எந்த அணிக்கும் உள்ளூர் ஆட்டம் கிடையாது. தொடக்க கட்ட போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், எப்போது அனுமதி அளிப்பது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : IPL ,Chennai ,BCCI , The 14th season of the IPL series starts on April 9 in Chennai: BCCI announcement
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி