மாமல்லபுரம் அருகே மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு இல்லாததால் தொடரும் கடல் அரிப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு மீனவர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் பிரதான தொழில் மீன்பிடி தொழில். இங்கு கடந்த சில ஆண்டுகளாக கடல் சீற்றம் காரணமாக, அப்பகுதி கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி கடல்நீர் கரை பகுதியை முன்னோக்கி வருவதால், மணல் திட்டு உருவாகி வருகிறது.

அந்த நேரங்களில் கடற்கரையில் மீனவர்கள் நிறுத்தி வைத்திருக்கும் படகுகள், ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு சேதமடைவதும், அதனை சரிசெய்வதும் உள்ளிட்ட வேலைகளிலேயே மீனவர்கள் கவனம் செலுத்துவதால் கடலுக்கு செல்ல முடியாமல் ஆகிறது. இதையொட்டி, வருமானமின்றி தவித்து வருவதாக கூறுகின்றனர். மேலும், படகுகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், ஆங்காங்கே பாதுகாப்பு இல்லாமல் நிறுத்துகின்றனர். இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

கடல் மெல்ல, மெல்ல முன்னோக்கி வருவதால் எதிர்காலத்தில் குடியிருப்புகளிலும் கடல்நீர் உள்ளே புகும் அபாயம் உள்ளது. தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுவதால், அப்பகுதியில், தங்களால் நிம்மதியாக மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. கடல் அரிப்பு ஏற்படாத வகையில் கொக்கிலமேடு கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கொக்கிலமேடு மீனவர் பகுதியில் அடிக்கடி கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்படுவதும், படகுகள் சேதமடைவதும் தொடர் கதையாக உள்ளது. இங்கு கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ஒரு தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.

இதற்கு அரசு செவி சாய்க்காமல் உள்ளது. மேலும், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சருக்கும், மீன்வளத் துறைக்கும் நேரில் சென்று பலமுறை கடிதம் கொடுத்துவிட்டோம். ஆனாலும் எந்த பயனும் இல்லை. இன்று அமைத்து தருகிறோம். நாளை அமைத்து தருகிறோம் என 10 ஆண்டுகளாக கூறி வரும் அதிகாரிகள், எந்த பணியும் செய்யவில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிவர் புயலின்போது இங்கு பார்வையிட வந்த தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜனிடம் இங்குள்ள நிலவரத்தை எடுத்து கூறினோம். அதற்கு அவர் மீன் வளத்துத் துறை அமைச்சரிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எங்களது ஆதங்கம், வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றனர்.

Related Stories:

>