பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 27 இடங்களில் சோதனை கணக்கில் வராத ரூ.1,000 கோடி சொத்து கண்டுபிடிப்பு: ரூ.1.2 கோடி ரொக்கம், வெளிநாட்டு முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல நகைக்கடைக்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, மும்பை, ஜெய்ப்பூர், நெல்லூர், இந்தூர், திருச்சூர் ஆகியவை உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நகைக்கடைக்கு சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் சிப்காட் பகுதியில் அதிநவீன கருவிகளுடன் நகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.பிரபல நகைக்கடை என்பதால், நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்க்கு நகைகள் வர்த்தகம் நடந்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்தது மற்றும் தங்க நகைகள் தயாரிக்கும் அதிநவீன கருவிகள் இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல், நகைக்கடையில் விற்பனை செய்யப்படும் நகைகளுக்கு இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைதொடர்ந்து கடந்த 4ம் தேதி 6ம் தேதி நள்ளிரவு வரை பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 15 நகைக்கடைகள் மற்றும் உரிமையாளர் வீடு, தலைமை அலுவலகம் என 27 இடங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.3 நாட்கள் நடந்த சோதனையில், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட போது பல கோடி ரூபாய் போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்து சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் ரியல் எஸ்டேட் தொழிலிலும் பணத்தை முதலீடு செய்து இருப்பதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், நகைக்கடையில் பழைய நகைகள் வாங்கும்போது செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் நகைகள் வாங்கி இந்த நகைகளை மெருகேற்றி புதிய நகைகள் போல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அப்படி விற்பனை செய்யும் நகைகளுக்கும் செய்கூலி மற்றும் சேதாரம் என கூறி வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்து மோசடி செய்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் பிரபல நகைக்கடைக்கு, கணக்கில் வராத ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1.2 கோடி ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து பிரபல நகைக்கடை உரிமையாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: