நக்சல்களுடன் தொடர்பு, கலவர வழக்கு: 2 ஆண்டுக்கு பின் கவிஞர் ஜாமீனில் விடுவிப்பு

மும்பை: நக்சல்களுடன் தொடர்பு மற்றும் கலவர வழக்கில் கைதான கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ், 2 ஆண்டுகளுக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், பீமா கோரேகானில் கடந்த 2018, ஜனவரி 1ம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக நக்சல்பாரிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறி கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் (81), அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், நவி மும்பை, தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவக் காரணங்களுக்காக அவர் ஜாமீன் கேட்டிருந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமீனில் மும்பையில் தங்கியிருக்கவும், தேவைப்படும்போது விசாரணைக்கு வரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாஸ்போர்ட்களை தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்றிரவு அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரது விடுதலையை அவரின் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கிட்டத்திட்ட 2 ஆண்டுகளுக்கு பின் வரவர ராவ் ஜாமீனில் வெளியே வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: