×

சொல்வதை கேட்காத அதிகாரிகளை அடியுங்கள்: மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார். பாஜகவை சேர்ந்த மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரும், பீகார் மாநிலம் பெகுசராய் பாராளுமன்ற உறுப்பினருமான கிரிராஜ் சிங், தனது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கோட்வாம்பூரில் வேளாண் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்ேபாது  அங்கு கூடிய மக்கள், அதிகாரிகள் தங்களது பேச்சை கேட்பதில்லை. அவர்கள் மக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசின் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்கின்றனர்.

அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு உதவுகின்றனர் என்று சரமாரியாக குற்றம்சாட்டினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், ‘பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு சில அதிகாரிகள் செவிசாய்ப்பதில்லை என்று எங்களுக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன. சிறிய விஷயத்திற்காக கூட மக்கள் என்னிடம் வருகின்றனர். அவர்கள், ஏன் என்னிடம் வேண்டும்? மக்கள் அளிக்கும் கோரிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். எம்பி, எம்எல்ஏ, கிராமத் தலைவர் உள்ளிட்ேடார் பொதுமக்களுக்கு சேவை செய்ய தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். மக்களாகிய நீங்கள் சொல்வதை அதிகாரி கேட்கவில்லை என்றால், அவர்களை பிரம்பால் அடியுங்கள்.

அவர்களின் தலையிலேயே அடியுங்கள். வேலை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு பின்னால் நான் இருக்கிறேன்’ என்றார். அமைச்சர் கிரிராஜ் சிங்கின் சர்ச்சை பேச்சு குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முதல்வர் நிதிஷ்குமார் அவர்களின் அரசு, இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினால், சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டால் சிறைக்கு அனுப்புவதாக மிரட்டுகிறது. இப்படி இருக்கையில் உங்களது கூட்டணியின் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,  அதிகாரிகளை அடிக்க வேண்டும் என்று மக்களை தூண்டிவிடுகிறார். இந்த அரசாங்கம் இயங்குகிறதா? இல்லையா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளது.


Tags : Central BJP , Beat the officials who do not listen: Central BJP Minister Controversial Speech
× RELATED சிபிஐ , அமலாக்கத்துறை மூலம் அரசியல்...