×

102-வது நாளாக தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்: மேலும் ஒரு விவசாயி தற்கொலை!

டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த ராஜ்பீர்சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் இந்த போராட்டம் 102 வது நாளை எட்டியுள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, போராட்ட களங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனால், போராட்ட களத்துக்கு புதிதாக விவசாயிகள் வருவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் விவசாயிகள் தங்களின் டிராக்டர்களையே வீடுகளாக மாற்றி தங்கி, சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யாத வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் உடல்நிலை பாதிப்பு, தற்கொலை, மர்மச்சாவுகள் என இதுவரையில் 250-க்கும் அதிகமானோர் பேர் வரை இறந்துள்ளனர்.

இந்நிலையில் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த ராஜ்பீர்சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதன் மூலம் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 284-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக மார்ச் 13-ம் தேதி மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உலக மகளிர் தினமான நாளை டெல்லியில் பெண் விவசாயிகள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Tags : Delhi , Delhi farmers' struggle continues for 102nd day: Another farmer commits suicide!
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த்...