×

நாங்கள் விளையாட தயாராகி விட்டோம்; நேருக்கு நேர் எதையும் சந்திக்க தயாராக உள்ளோம்: பாஜகவுக்கு மம்தா பானர்ஜி சவால்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக சிலிகுரியில் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் 294 பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதியும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக இருக்கிறார். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து சிலிகுரியில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மம்தா பானர்ஜி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் பேரணியாக சென்றனர். பின்னர் பேசிய அவர்; சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் மத்திய அரசில் தான் மாற்றம் நடக்கும் மேற்கு வங்கத்தில் இல்லை.

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறும் பிரதமர் உ.பி., பீகாரில் என்ன நிலை என பார்க்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள். சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் அவர்கள் சென்று வரலாம். காஸ் சிலிண்டர் விலையை ஏற்றி விட்டு, அதற்கு காரணம் சொல்லாமல், பெண்களை அவமதிக்கிறார். மத்திய அரசு அனைத்தையும் விற்று வருகிறது. ஏர் இந்தியா, பிஎஸ்என்எல், ரயில்வே என அனைத்தையும் விற்று விட்டனர். மோடி வெற்று வாக்குறுதிகளை பிரதமர் அளித்து வருகிறார். மாநிலத்தை பிரிக்க  பாஜக முயற்சி செய்கிறது. கொரோனா காலத்தில் மோடி, இங்கு வரவில்லை. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கூட்டம் நடத்தினார்.

மக்களிடம் இருந்து பாஜக தான் கொள்ளையடித்து வருகிறது. ஓட்டை வாங்க பாஜக முயன்றால், நீங்கள் பணத்தை வாங்கி கொண்டு திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். நாங்கள் விளையாட தயாராகி விட்டோம்; நேருக்கு நேர் எதையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் கூறினார். மேற்குவங்கத்தில் ஒருபுறம் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம், மறுபுறம் மத்திய அரசுக்கு எதிராக மம்தா பேரணி நடைபெற்று வருவதால் மேற்கு வங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


Tags : Mamata Banerjee ,BJP , We were getting ready to play; We are ready to face anything face to face: Mamata Banerjee challenge to BJP
× RELATED விவாகரத்தான நிலையில் ஒரே தொகுதியில்...