இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது: ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு

ஷில்லாங்: ஜன் அவுஷதி பரியோஜனா எனப்படும் மலிவு விலையில் மருந்து கிடைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். மரபுசார் மருந்து வகைகளை மலிவான விலையில் விற்பனை செய்ய ‘பிரதான் மந்திரி பாரதீய ஜன் அவுஷதி பரியோஜனா’ திட்டம் கடந்த 2013-14ல் தொடங்கப்பட்டது. இதன் மூலம், மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் மலிவு விலை மருந்துக் கடைகள் நிறுவப்பட்டன. இத்திட்டம் தொடங்கப்பட்ட மார்ச் 7ம் தேதி ஆண்டுதோறும் ‘ஜன் அவுஷதி’ தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் வகையில் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இத்திட்டத்தின் படி மார்க்கெட் விலையை விட 50% லிருந்து 90% வரை மலிவான விலையில் மருந்துகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென நாடு முழுவதும் பிரத்யேக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்; நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக மக்கள் மருந்தகங்கள் நடத்தப்படுகிறது. நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் விலை 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும். தொண்டு செய்வதுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் மருந்தகங்களுக்கான ஊக்கத்தொகை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனுடன், உற்பத்தி அதிகரிக்கப்படும் போது வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் நல்ல மருத்துவம் கிடைக்க அரசு மிகுந்த கவனம் செலுத்துவதோடு உள்கட்டமைப்பையும் மேம்படுத்துகிறது. சானிட்டரி நாப்கின்களும் கருவுற்ற பெண்களுக்கு ஊட்டமளிக்கும் மருந்துகளும் மக்கள் மருந்தகங்களில் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

ஆயிரத்துக்கு மேற்பட்ட மருந்தகங்கள் பெண்களால் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் மருந்தகங்களில் 75 ஆயுர்வேத மருந்துகளை விற்க முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: