×

திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும்: சுவேந்து அதிகாரி பேச்சு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும் என நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார். மேற்குவங்கத்தில் 294 பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதியும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தாவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் உத்வேகத்தில் இருக்கிறது பாஜ. அது, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளை வளைத்து போட்டுக் கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் முக்கிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் சொந்த பலத்தில் களம் காண்கிறார் முதல்வர் மம்தா. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்தே மேற்குவங்க அரசியலில் உச்சபட்ச பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல் பாஜக முதல்கட்டமாக 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ள நிலையில், அண்மையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியை பாஜக களம் இறக்கி உள்ளது போட்டி கடுமையாகி உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரி போட்டியிடும் தொகுதிக்கு உள்பட்ட முஷிபரா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; ஒருவேளை திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும். நந்திகிராம் எனக்குப் பெரிய சவால் இல்லை.

நான் நந்திகிராம் தொகுதியில் நிச்சயம் மம்தா பானர்ஜியை வீழ்த்தப் போகிறேன். மீண்டும் அவரைக் கொல்கத்தாவுக்கு அனுப்பப் போகிறேன். எனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த பாஜக தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். நந்திகிராம் தொகுதியில் தாமரை மலர நான் பணிபுரிவேன். மாநிலம் முழுவதும் தாமரை மலரத் துணைபுரிவேன். நந்திகிராம் மட்டுமல்ல, மாநிலத்தில் தோல்வியை மம்தா பானர்ஜி சந்திக்கப் போகிறார். நந்திகிராமில் மட்டும் மம்தா 50 ஆயிரம் வாக்குகளில் தோற்பார் எனவும் கூறினார்.


Tags : West Bengal ,Kashmir ,Trinamool Congress ,Swandhu , West Bengal will become Kashmir if Trinamool Congress returns to power: Swandu official talks
× RELATED குற்றவாளிகளை கைது செய்ய சென்ற...