பெரம்பலூர் அருகே இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் தீவைத்து எரிப்பு: 4 பேரிடம் விசாரணை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேற்று 3 வயதுடைய புள்ளிமான் அதன் குட்டியுடன் எரிந்து கிடந்தது தொடர்பாக, பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மயில், மான், காட்டுப் பன்றி உள்ளிட்டவை அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காததால், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கும், விளைநிலங்களுக்கும் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்து வருவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் அடுத்த அரணாரை- ரெங்கநாதபுரம் பிரிவு சாலையில், மருதையான் கோயில் அருகே புள்ளிமான் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், எஸ்.ஐ ராம்குமார் உள்ளிட்ட போலீசாரும், வனச்சரகர் சசிக்குமார் உள்ளிட்ட வனத்துறையினரும் அங்கு சென்று பார்த்தபோது, பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 3 வயது புள்ளிமான் மற்றும் குட்டியுடன் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது. பின்னர், மான் மற்றும் குட்டியின் உடலை மீட்ட வனத்துறையினர் அதனை பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர். அதனையடுத்து அந்த பகுதியில் பெரம்பலூர் போலீசார் பார்வையிட்டதில், அரணாரை பகுதியைச் சேர்ந்த சகோதர்களான ராஜமாணிக்கம், பழனியாண்டி, மாரிமுத்து ஆகியோர் தங்களது நெல் வயலில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், இறைச்சிக்காக உயிரிழந்த மானை மக்காச்சோள தட்டைகளைக் கொண்டு எரித்து இருக்கலாம். அல்லது சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்ட மானின் வயிற்றில் குட்டி இருந்ததால் எரித்துவிட்டு அதே இடத்தில் போட்டு விட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விவசாயிகள் பெரியசாமி, ராஜமாணிக்கம், பழனியாண்டி, மாரிமுத்து ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.​

Related Stories: