அரசு கொள்முதல் நிலையம் அமைக்காததால் வீரசோழனில் வீணாகும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கவலை

திருச்சுழி: வீரசோழன் பகுதியில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததால், அறுவடை செய்து மூட்டை போடப்பட்ட நெல் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருச்சுழி, நரிக்குடி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மழை பெய்ததால் இந்த பகுதியில் விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல் அதிகளவில் பயிரிட்டனர். நெல் நல்ல விளைச்சல் அடைந்தவுடன் தொடர்ந்து மழை பெய்து தண்ணீரில் மூழ்சி நெல் பயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நெல் போக மீதியை அறுவடை செய்துள்ளனர். வீரசோழன் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் உள்ளனர். தற்போது நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் அரசு மூலம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.

வீரசோழன் பகுதியில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று கூறியதால் அந்த பகுதியை சேர்ந்த வீர ஆலங்குளம், சுள்ளங்குடி, குறையறவாசித்தான், நல்லுக்குறிச்சி உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைந்த நெல் மூடைகளை பாப்பாங்குளம் கிராமத்தில் அடுக்கி வைத்துள்ளனர். நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து ஒரு மாத காலமாகியும் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததால் நெல் மூட்டைகளில் உள்ள நெல் மணிகள் வீணாகி வருகிறது. பாப்பாங்குளம் கிராமத்தில் 7000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை விற்பனை செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் என பாப்பாங்குளம்ம விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: