விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயன்பாடின்றி நிற்கும் பேட்டரி வாகனங்கள்: நிர்வாக அலட்சியத்தால் நோயாளிகள் அவதி

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நிர்வாக அலட்சியத்தால் பேட்டரி வாகனங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. இதனால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவப்பிரிவுக்கும், மகப்பேறு மருத்துவப்பிரிவுக்கும் நடுவில் போக்குவரத்து நிறைந்த ராமமூர்த்தி ரோடு உள்ளது. மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவப்பிரிவில் இருந்து கர்ப்பிணிகள் ரத்த பரிசோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பதற்கு ரோட்டை கடந்து பொது மருத்துவப்பிரிவுக்கு வர வேண்டும். ரோட்டை கடக்கும் போது விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். நோயாளிகள் சிரமின்றி சென்று வருவதற்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பில் இரு பேட்டரி கார்கள் வாங்கப்பட்டன. இந்த பேட்டரி கார்களில் கர்ப்பிணிகள், நோயாளிகள், உறவினர்கள் ஏறி, இறங்கி சென்று வந்தனர். பேட்டரி கார் கடந்த 9 மாதங்களாக பழுதாகி சரி செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது பொதுப்பிரிவில் இருந்த 20க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.169 கோடியில் 7 மாடி கட்டிடம் 80 மீ நீள, அகலத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மருத்துவமனை கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் பொதுமருத்துவமனையின் கடைக்கோடியில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடங்கள் மருத்துவமனைகளாக மாற்றி செயல்பட்டு வருகின்றன.மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுகளில் இருந்து தற்போதுள்ள மருத்துவமனைக்கு நோயாளிகள், உறவினர்கள் ஒரு கி.மீ தூரம் போக்குவரத்து நிறைந்த ராமமூர்த்தி ரோடு, மல்லாங்கிணர் ரோட்டில் அலைந்து திரிகின்றனர். பேட்டரி கார் இயங்காத நிலையால், சில சமயங்களில் காலவாதியான பழைய ஆம்புலன்சில் நோயாளிகள், உறவினர்களை ஏற்றி செல்கின்றனர். பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஒரு வாகனத்தில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஏற்றி செல்வது தொடர்கிறது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ் கூறுகையில், ‘பேட்டரி கார்கள் 9 மாதங்களுக்கு முன்பே பழுதாகி விட்டன. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப்பணிகள் நடப்பதால் மருத்துவமனை வளாகமும், மல்லாங்கிணர் ரோடும் சேறும், சகதியால் புழுதி பறந்து வருகிறது. இந்நிலையில் தான் பேட்டரி கார்களை நோயாளிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு சென்று வர பயன் உள்ளதாக இருக்கும். ஆனால், பழுதாகி நிற்கும் இரு பேட்டரி கார்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலட்சிய போக்குடன் இருந்து வருகிறது. கலெக்டர் தலையிட்டு பேட்டரி கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’ என்றார்.

Related Stories: