போதிய படகுகள் இல்லை கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சி படகு இல்லத்தில் போதிய படகுகள் இல்லாததால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. படகுகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். கொடைக்கானல் ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கொடைக்கானல் படகு குழாம் ,கொடைக்கானல் நகராட்சி ஆகியவை படகுகள் இயக்கி வருகின்றன. இதில் கொடைக்கானல் படகு இல்லம் சார்பில் நடத்தப்பட்ட படகு சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொடைக்கானல் ஏரியில் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி  செய்து மகிழ்வது வழக்கமான ஒன்று. இதற்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு படகு இல்லத்தின் சார்பில் சுமார் 100 படகுகள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டு படகு இல்லங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கொடைக்கானல் ஏரி நகராட்சிக்கு சொந்தமானதாகும். ஆனால், கொடைக்கானல் ஏரியில் சுற்றுலாப் பயணிகளிடம் படகுகள் இயங்குவதன் மூலம் பெறப்படும் கட்டண தொகை சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சென்றுவிடுகிறது. கொடைக்கானல் நகராட்சி சார்பில் 4 படகுகள் மட்டுமே உள்ளன.  பெடல் படகுகள்  சேதமாக்கி பயன்பாடற்ற நிலையில் உள்ளன. 4 படகுகளை வைத்து நகராட்சி படகு இல்லம் செயல்பட்டு வருவதால் போதிய வருவாய் கிடைப்பதில்லை. இதனால் நகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அது போல 4 படகுகள் மட்டுமே இருப்பதால் இங்கு பணி செய்பவர்கள் படகு ஓட்டுவதற்கு உரிய பணிகள் கிடைக்காமல் வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டனர்.

நகராட்சி படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் போதிய படகுகள் இல்லாததால் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இதனால் தினம்தோறும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நகராட்சி படகு இல்ல ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. கொடைக்கானல் நகராட்சியில் பொறுப்பேற்ற நகராட்சி ஆணையாளர் இதுபற்றி கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது. எனவே, உடனடியாக கூடுதல் படகுகளை வரும் மே மாதத்திற்கு உள்ளாக வாங்கி கூடுதல் வருவாயை நகராட்சி தர வேண்டும், என்று பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதல் படகுகள் இயக்கினால் கூடுதல் படகு ஓட்டுனர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும். அதே போல வருவாய் கிடைக்கும். சுற்றுலாப் பயணிகளும் தங்குதடையின்றி படகு சவாரி செய்து மகிழும் வாய்ப்பு உள்ளது. கொடைக்கானல் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: