ஊதியூர் அருகே அமராவதி ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை: அதிகாரிகள் தடுத்து நிறுத்த கோரிக்கை

காங்கயம்: ஊதியூர் அருகே அமராவதி ஆற்றில் கடந்த 6மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த மணல் கொள்ளை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து துவங்கும் அமராவதி ஆறு தாராபுரம், ஊதியூர் அடுத்துள்ள சங்கராண்டாம்பாளையம் வழியாக கரூர் அருகே சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் அமராவதி அணை முதல் காவிரியில் கலக்கும் இடம்வரை ஆங்காங்கே பெரிய பெரிய மணல் திட்டுக்கள் உள்ளன. பல லட்சக்கணக்கான லோடு மணல் இந்த ஆற்றில் படிந்துள்ளது.  இந்த மணல் படிமங்களால் தண்ணீர் சேமிக்கப்பட்டு ஆற்றோரப் பகுதிகளில் உள்ள கிணறுகள், போர்வெல்கள் ஆகியவற்றுக்கு நீராதாரமாக உள்ளது. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் ஆங்காங்கே மணல் திருட்டு சம்பவங்கள் அதிகாரிகளுக்கு தெரிந்தும் தெரியாமலும் அவ்வப்போது நடந்து வருவது அப்பகுதி மக்கள் அறிந்த ஒன்றாகும்.

கடந்த சில ஆண்டுகளாக மட்டும் பல ஆயிரக்கணக்கான லோடு மணல் கொள்ளைபோயுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இரவு நேரங்களில் கூலி ஆட்கள் மூலம் லாரிகளில் மணல் அள்ளிப்போடப்பட்டு தாராபுரம், குண்டடம், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்தனர். ஆற்றில் கீழ் பகுதியில் கற்கள் தெரியுமளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது.  ஊதியூர்  அடுத்துள்ள சங்கரண்டாம்பாளையம், வேலப்பகவுண்டன்பாளையம், புதுப்பாளையம், கோட்டைமாரியம்மன் கோயில் பகுதிகளில் ஆங்காங்கே மணலை மலைபோல் ஆட்களைக் கொண்டு குவித்து வைத்து இரவில் எளிதாக அள்ளி கடத்தி வந்தது அதிகாரிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் கடந்த 6மாத காலமாக வருவாய்த்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் மணல் அள்ளுவது முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர். ஆனால் கடந்த 15நாட்களுக்கு மேலாக மீண்டும் மணல் கொள்ளை துவங்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, முன்புபோல லாரிகளில் மணலைக் கடத்துவது இல்லை.

சிமெண்ட் சாக்குகளில் மணலை நிரப்பி மினி டெம்போக்கள் மூலம் இரவு நேரத்தில் கடத்தி வருகின்றனர். இது இப்படியே தொடர்ந்தால் அடுத்த சில வாரங்களில் லாரிகளில் அள்ளத் தொடங்கி விடுவர். எனவே வருவாய் மற்றும் போலீஸ் துறையினர் அமராவதி ஆற்றுப் படுகைகளில் ரோந்து மேற்கொண்டு மணல் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர். சிமெண்ட் சாக்குகளில் மணலை நிரப்பி மினி டெம்போக்கள் மூலம் இரவு நேரத்தில் கடத்தி வருகின்றனர். இது இப்படியே தொடர்ந்தால் அடுத்த சில வாரங்களில் லாரிகளில் அள்ளத் தொடங்கி விடுவர்.

Related Stories:

>