சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக 45 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றம்

திருப்பூர்: சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக திருப்பூர் கே.எஸ்.சி பள்ளி அருகே பழமை வாய்ந்த மரம் நேற்று மாநகராட்சியினரால் வெட்டி அகற்றப்பட்டது.

திருப்பூர் கே.எஸ்.சி. பள்ளி சாலையில் 45 ஆண்டு பழமையான பூவரசு மரம் இருந்தது.  இந்நிலையில் அந்த சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணிக்காக நேற்று பழமையான பூவரசு மரம் பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டி சாய்க்கப்பட்டது. தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் மரங்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. பழமையான மரத்தை மாநகராட்சி அகற்றியது சமூக ஆர்வலர்கள் பலரையும் கவலையடைய செய்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருப்பூர் பகுதிகளில் ஏற்கனவே மரங்கள் குறைவு. முழுவதும் நிறுவனங்களாகவே தான் இருக்கின்றன. இது போன்ற பழமையான மரங்கள் இருப்பதால், கோடை காலங்களில் பலரும் இதன் நிழலில் நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு செல்வார்கள். ஆனால் இது போன்று பல மரங்கள் பல்வேறு பணிகளுக்காக அகற்றப்படுவது வேதனையளிக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு பதிலாக, அவற்றை மறுநடவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.,என்றனர்.

Related Stories: