திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பெங்களூரு பக்தர் தானமாக வழங்கிய ஓங்கோல் இன பசு காணவில்லை என புகார்: மீட்கப்பட்டு கோசாலையில் ஒப்படைத்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் பசுக்களை தானமாக வழங்குவது வழக்கம். அவ்வாறு வழங்கப்படும் பசுக்கள், கோயில் கோசாலையில் பராமரிக்கப்படும். அதன்படி, பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது தாயின் நினைவாக ஓங்கோல் இன பசுவை தானமாக வழங்கினார். இந்நிலையில், தானமாக வழங்கிய ஓங்கோல் இன பசு, கோசாலையில் தற்போது இல்லை என்ற தகவல் சம்பந்தப்பட்ட பெங்களூரு தொழிலதிபருக்கு தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று நேரில் வந்து முறையிட்டார். கோயிலுக்கு வழங்கிய பசுவை நேரில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், கோசாலையில் அந்த பசு இல்லை. அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் உத்தரவின்பேரில், இது தொடர்பான பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, ஆதரவற்ற நிலையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் சொரகொளத்தூர் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் ஒருவருக்கு கலெக்டரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட ஓங்கோல் இன பசு வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சொரகொளத்தூர் கிராமத்துக்கு சென்ற கோயில் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட ஓங்கோல் பசுவை திரும்ப பெற்றுவந்து, அண்ணாமலையார் கோயில் கோசாலையில் விட்டனர். அதன்பின்பே, அந்த தொழிலதிபர் நிம்மதி பெருமூச்சுவிட்டார். இதுகுறித்து, அண்ணாமலையார் கோயில் நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் அய்யம்பிள்ளை தெரிவித்ததாவது: அண்ணாமலையார் கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பசுக்களை பக்தர்கள் தானமாக வழங்குகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக கோசாலையில் பராமரிக்க முடியாத நிலை உள்ளது.

எனவே, அறநிலையத்துறை மற்றும் கலெக்டரின் அனுமதி பெற்று வறுமையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்காக பசுக்கள் ஒப்படைக்கப்படுகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட ஓங்கோல் இன பசு கோசாலையில் கன்று ஈன்ற பிறகு, அந்த கன்று குட்டியை மட்டும் வைத்துக்கொண்டு, கலெக்டரின் உத்தரவின்பேரில் ஆதரவற்ற பெண் ஒருவருக்கு பசு ஒப்படைக்கப்பட்டது. தற்போது, தானமாக வழங்கியவர் கோசாலையில் பசு இருப்பதை விரும்புவதாக தெரிவித்ததன்பேரில், பசுவை திரும்ப பெற்று கோசாலையில் சேர்த்துவிட்டோம்.  மேலும், பசுவை திரும்ப ஒப்படைத்த பெண்ணுக்கு, வேறொரு பசுவை விரைவில் கலெக்டர் அனுமதி பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: