பரமக்குடி தொகுதியில் சீட் கேட்டு அதிமுக மாஜி அமைச்சர் கூட்டணியினர் மல்லுக்கட்டு

* சிட்டிங் எம்எல்ஏவும் போராட்டம்

* உள்குத்து வேலைகளில் ஈடுபட திட்டம்

பரமக்குடி தொகுதியில் இம்முறை சிட்டிங் எம்எல்ஏவுக்கு எதிராக மாஜி அமைச்சர் உட்பட பலர் வரிந்துக் கட்டி நிற்கின்றனர். இதனால் கட்சிக்குள் உள்ளடி வேலைகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், ஆளுங்கட்சிக்கு கடும் சிக்கல் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில், பரமக்குடி மட்டும் தனி தொகுதியாக உள்ளது. பரமக்குடி நகர், பரமக்குடி,  நயினார்கோவில், போகலூர் உள்ளிட்ட ஒன்றியங்களும், கமுதி ஒன்றியத்தில்,  அபிராமம் பேரூராட்சி மற்றும் மண்டல மாணிக்கம் உள்ளிட்ட பகுதிகள்  தொகுதிக்குள் உள்ளன. எதிரணிக்குசென்றதால்... பரமக்குடி  தொகுதியில் கடந்த 2016ல் அதிமுக சார்பாக டாக்டர் முத்தையா  வெற்றி பெற்றார். பின்னர் அவர் டிடிவி.தினகரன் பக்கம் சென்றதால் பதவியை  இழந்தார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இடைத்தேர்தலில்  மாநில அம்மா பேரவை  இணைச்செயலாளர் சதன் பிரபாகர் வெற்றி பெற்றார். தற்போதைய சூழ்நிலையில், பரமக்குடி தனி தொகுதியில் அதிமுக சார்பில்  சீட் பெறுவதற்கு கட்சியினரிடம் கடும்  போட்டி நிலவி வருகிறது.

மாசெவுடன் டிஷ்யூம்...

பரமக்குடி  தொகுதியில் உள்ள சிட்டிங்  எம்எல்ஏ பதவியேற்று இரண்டு வருடம் ஆகிறது.  இவருக்கும், மாவட்ட செயலாளருக்கும் டெண்டர் விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டது. தலைமைக்கு  சென்ற புகாரால் இருவரிடையே தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.  எனவே, இத்தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்  சுந்தரராஜை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து, சீட் பெற்றுத் தருவதில் ஒரு  குரூப் முன்னிலை வகிக்கிறது. கட்சியில் உள்ள சிலர் எம்எல்ஏவிற்கு  எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.

எனக்குத்தான் சீட்டு...

 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று,   ஆட்சியை  தக்க வைக்க சிட்டிங் எம்எல்ஏ சாதகமாக அமைந்தது, முதல்வர், அமைச்சர் வேலுமணி அன் கோவிடம் வரவேற்பைத் தந்துள்ளது.  மண்டல பொறுப்பாளர் அமைச்சர் உதயகுமாரின் முழு ஆதரவும் சிட்டிங்  எம்எல்ஏவிற்கு உள்ளதால், கட்டாயம் சீட்டு எனக்குத்தான் என பூத் கமிட்டி  கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை சதன் பிரபாகர் தொடர்ந்து  வருகிறார்.

ஓபிஎஸ் ஆதரவுடன்...

தொகுதியில் அதிமுக முதல் வேட்பாளராக  நிறுத்தப்பட்டு  வெற்றி பெற்ற உக்கிரபாண்டியன் மருமகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்  பாலசுப்பிரமணியன்.  இவர்  தொடர்ந்து ஏழு முறை சீட் கேட்டு விருப்ப மனு  அளித்துள்ளார். கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பார்த்திபனூர்  மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக கட்சியின் மூலம் அறிவிக்கப்பட்டும், பாஜ  கூட்டணிக்கு சீட் கொடுப்பதற்காக வேட்பாளர் மாற்றப்பட்டார். இதனால், அதிமுக  மாவட்ட கவுன்சிலர்  வெற்றிவாய்ப்பை இழந்தது. இந்த முறை எம்எல்ஏ சீட் வாங்க  வேண்டுமென முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஓபிஎஸ் ஆதரவு  உள்ளது. மேலும்,  இவருடைய மகன் வினோத், பார்த்திபனூர் நகரச் செயலாளராக  உள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.  பரமக்குடி அருகே உள்ள  நயினார்கோவில் ஒன்றியம்  வாணியவல்லம்  ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன்.  கடந்தமுறை இடைத்தேர்தலில் சீட் கேட்டார். தற்போது சீட்  வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர்  சுந்தரராஜன்  வீட்டில் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஜியும் களத்தில்...

முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன் மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வு  செய்யப்பட்டு, அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். கட்சியினருக்கு  நன்கு  தெரிந்தவர். ஆனால் 2016 மற்றும் இடைத்தேர்தலில் சீட் கிடைக்கவில்லை  என்பதால் கட்சிப்பணிகளில் ஈடுபடவில்லை. கொரோனா  காலகட்டங்களில்  கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என  கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், எந்த வேட்பாளர்  எதிர்த்து நின்றாலும், போட்டியை உருவாக்குபவராக சுந்தரராஜன் செயல்படுவார்  என்ற எண்ணமிருக்கிறது. மாவட்ட செயலாளர் சீட்டு வாங்கி தருவார் என்ற  நம்பிக்கையிலும், முன்னாள் அமைச்சர் என்ற முறையிலும் தனக்கு சீட் வாங்கி  தருமாறு மூத்த அமைச்சர்களிடம் காய் நகர்த்தி வருகிறார்..

மேலிட சிபாரிசு இருக்கு...:

போகலூர்  ஒன்றியம்,  காமன்கோட்டையைச் சேர்ந்தவர் மாரி. கூட்டு குடிநீர் திட்ட  பொறியாளராக பணியாற்றி தற்போது விருப்ப  ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி  பாலாமணி முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்தவர் என்ற  அடிப்படையில் எம்எல்ஏ சீட்டு கேட்டு வருகிறார். கடந்த முறை நடைபெற்ற  ஊராட்சி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்துள்ளார்.  முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செலவு செய்வதற்கு தயாராக இருப்பதாக  சொல்லி மேலிடத்தில் சீட்டு  கேட்டு வருகிறார்.

கூட்டணியும் கோதாவில்...

 அதிமுக கூட்டணியில்  உள்ள தமிழ் மாநில காங்கிரஸ்  கட்சி பரமக்குடி தொகுதியை கேட்டு வருகிறது.  காங்கிரஸ் மற்றும் தமாகா சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றியும்,  ஒரு முறை தோல்வியும் அடைந்த முன்னாள் எம்எல்ஏ ராம்பிரபு நிற்பதற்கான  வாய்ப்பு அதிகமிருக்கிறது. தமாகா தலைவர் வாசன் கட்சிக்கு ஒதுக்கப்படும்  சீட்டில் கட்டாயம் பரமக்குடி வேண்டுமென கேட்டுள்ள தகவலும் இருக்கிறது.  இந்நிலையில், தமாகாவுக்கு கூட்டணி கட்சி ரீதியில் கொடுக்கப்பட்டால்  ராம்பிரபு வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.  மாநில எஸ்சி எஸ்டி அணி தலைவர் பாலகணபதி  எப்படியும் கட்சியில் பேசி சீட்டு வாங்கிட தலைமைக்கு அழுத்தம் கொடுத்து  வருகிறார். இவர், அதிமுக கூட்டணியில் பாஜ வேட்பாளராக பார்த்திபனூர் மாவட்ட  கவுன்சிலுக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் சிட்டிங் ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு எதிராக, அக்கட்சியிலே பலர் சீட்டு கேட்டு சிட்டாக திரிவதால், இம்முறை அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

பெண்களுக்கு ஒதுக்கீடா?

பெண்களுக்கு பரமக்குடி  தொகுதி ஒதுக்கப்பட்டால்  மகளிர் அணி சார்பாக போட்டியிட அதிமுகவை சேர்ந்த தனுக்கொடி மகள் திலகவதி,  பரமக்குடியில் வழக்கறிஞராக பணியாற்றும் பிரபா, அதிமுக துணை  ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் மகனும் இவர்களும் ஒன்றாக சட்ட கல்லூரியில்  படித்ததால் அதன்மூலமாக சீட்டுக்கு முயற்சி செய்து வருகிறார்.

Related Stories: