ரிக் நகரத்தில் ரிஸ்க் எடுத்தாலும் பலனில்லை திருப்பமே நேராத திருச்செங்கோட்டில் அதிமுகவினரிடையே போட்டாபோட்டி

* மாஜிக்கு ‘செக்’ வைக்கும் அமைச்சர்

* சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் சிபாரிசு

திருச்செங்கோடு: ஒரு கால கட்டத்தில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய சட்டமன்றத் தொகுதியாக இருந்தது திருச்செங்ேகாடு. இந்த தொகுதியை பிரித்தே பின்னர், குமாரபாளையம் தொகுதி உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் பிரசித்த பெற்ற ஆன்மீகத்தலமாக திகழும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் இந்த தொகுதியின் பிரதான அடையாளம். கல்வி கேந்திரமாகவும், தொழில் வளம் மிகுந்த பகுதியாகவும் திகழும் திருச்செங்கோடு ரிக் வண்டிகள் அதிகம் நிறைந்த பகுதியாகவும் திகழ்கிறது. இதனால் ரிக் சிட்டி என்ற பெயரும் திருச்செங்கோட்டுக்கு உள்ளது. ஆன்மீகம், தொழில்வளம், கல்வியில் சிறந்து விளங்கும் திருச்செங்கோடு தமிழக அரசியல் களத்திலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவே விளங்கி வருகிறது. இந்த ஊரைச்சேர்ந்த டாக்டர் சுப்பராயன், சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தவர். அவரது மகன் மோகன் குமாரமங்கலம், பேரன் ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரும், மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளனர். இந்த ஊரில் பிறந்து வளர்ந்த பொன்னையன், செல்வகணபதி ஆகியோரும் தமிழக அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.  தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட, திருச்செங்கோடு எம்பியாக இருந்துள்ளார்.

1951ம் ஆண்டு உருவான திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 2 முறையும், திமுக 3முறையும், அதிமுக 7முறையும், சுயேட்சை, கம்யூனிஸ்ட், தேமுதிக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் களத்தில் எப்படிப்பட்ட சூழல் நிலவினாலும் உள்ளூர் நலனை கருத்தில் கொண்டு வாக்களிப்பதில் வல்லவர்கள் என்ற பெருமையும் இந்த தொகுதி மக்களுக்கு உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொகுதி அதிமுக கூட்டணி மற்றும் அதிமுக  எம்எல்ஏக்களின் கைகளில் இருந்தது. ஆனால் தொகுதிக்கான நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது மக்களின் குமுறல். இந்நிலையில் நடப்பு சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோட்டில் களமிறங்க அதிமுகவினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் கட்சி தலைமையிடம் காய் நகர்த்தி வருகின்றனர். இதில் பிரதான இடத்தில் இருப்பவர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பொன்சரஸ்வதி. அமைச்சர் தங்கமணியின் தீவிர ஆதரவாளர் என்பதோடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் மிகவும் பரிட்சயமானவர். இதனால் இந்த முறையும் தனக்கே சீட் கிடைக்கும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

அதே நேரத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரமும் திருச்செங்கோடு தொகுதியை குறி வைத்து வலம் வருகிறார். கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விரதம் இருக்கிறேன், செருப்பு அணியாமல் நடக்கிறேன் என்று கூறி, நூதன முறையில் முக்கிய நிர்வாகிகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே தனது மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான இவருக்கு சீட் வழங்கினால் சாதகம் இருக்கும் என்றாலும், தனது அரசியல் பயணத்திற்கு பாதகம் வரும் என்ற மனநிலையும் அமைச்சரிடம் உள்ளது என்கின்றனர் அதிமுகவினர். இதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன் சரஸ்வதி வெறும்  3,398 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். எனவே நடப்பு தேர்தலில் வெற்றி வாய்ப்பு நூலிழையில் தான் உள்ளது. அதனால் எங்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்று உள்ளூரை சேர்ந்த  வக்கீல் சந்திரசேகர், தோக்கவாடி செல்லப்பன், சபரி தங்கவேல், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முரளி என்று பலர் மல்லுக்கட்டி வருகின்றனர். ஏற்கனவே தேமுதிக ஜெயித்த தொகுதி என்பதால் எங்களுக்கு வேண்டும் என்று அந்த கட்சியும் மல்லு கட்டுகிறது. இதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள தமாகாவும் திருச்செங்கோடு வேண்டும் என்று துண்டு சீட்டை கொடுத்து விட்டு காத்திருக்கிறது. நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வகுமார் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்  செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கடும் குடுமிப்பிடிக்கு இடையில் மாவட்ட செயலாளரான அமைச்சர் தரப்பில் சிட்டிங் எம்எல்ஏவுக்கே மீண்டும் வாய்ப்பளிக்க பரிந்ததுரை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சீட் உறுதி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதே நேரத்தில் நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, நலிந்து போகும் பட்டறை தொழில்களுக்கு மறுவாழ்வு, ரிக் மற்றும் லாரி தொழிலில் தொடரும் சிரமங்களுக்கு முடிவு என்று ஆளுங்கட்சி கொடுத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கொதிப்பில் உள்ள தொகுதி மக்கள், சீட் வாங்குவோரை கோட்டைக்கு அனுப்புவர்களா என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

காற்றில் கலந்துபோன ரிங் ேராடு வாக்குறுதி

‘திருச்செங்கோட்டில் பற்றி எரியும் பிரச்னைகள் எதுவும் கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படவே இல்லை. பெரிய சாலை சந்திப்பாக விளங்குவதால் அதிக எண்ணிக்கையில் பஸ்கள் இங்கு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் இயக்கும் வாகனங்களும், லாரிகளும், ரிக்குகளும், கார்களும், டூவீலர்களும் இங்கு அதிகளவு வருவதால் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள சரியான நேரத்திற்கு போக முடியவில்லை. இந்த சிரமத்தை போக்க, திருச்செங்கோட்டை சுற்றி வட்டப்பாதை (ரிங் ரோடு) அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி, காற்றில் கலந்து மாயமாகிவிட்டது. இது மட்டுமல்ல, குறைந்த பட்சம் திருச்செங்கோடு புறவழிச்சாலை திட்டம் கூட நிறைவேற்றப்படவில்லை,’’ என்பது தொகுதி மக்களின் வேதனைக்குமுறல்.

Related Stories: