விஐபி தொகுதியில் யாருக்கு யோகம்? சங்கரன்கோவில் தொகுதிக்கு அதிமுகவில் கடும் போட்டி: புதிய வேட்பாளரா? பழைய முகமா?

தென்காசி மாவட்டத்தில் விஐபி தொகுதியாக கருதப்படும் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட அதிமுகவில் சீட் கேட்டு பிரபலங்கள், மாஜிக்கள், புதியவர்கள் என பலரும் மோதி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தொடர்ந்து அமைச்சர் பதவிக்குரிய தொகுதியாக சங்கரன்கோவில் தொகுதி திகழ்கிறது. வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால் சங்கரன்கோவில் தொகுதிக்கு அமைச்சர் யோகம் உண்டு என்ற காரணத்தினால் இந்த தொகுதியில் அதிமுகவினர் இடையே  வேட்பாளராக கடும் போட்டி நிலவுகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வாசுதேவநல்லூரும், சங்கரன்கோவிலும் தனி தொகுதிகளாகும். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை சங்கரன்கோவில் நகராட்சியை தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் முழுக்க முழுக்க கிராமப்புறங்களை கொண்டது.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதி மட்டும் நதி நீர் பாசன வசதி இல்லாத தொகுதியாக உள்ளது. இங்கு 75 சதவீத மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 15 சதவீத மக்கள் நெசவுத் தொழில் செய்கின்றனர். சங்கரன்கோவில் நகரை பொறுத்தவரை துண்டு, கைலி, கைத்தறி புடவை ஆகியவை தயார் செய்யும் விசைத்தறி கூடங்கள் உள்ளது. கிராமப் புறங்களுக்கு வருவாய் ஆதாரமாக விவசாயம் விளங்குகிறது. பூக்கள், எலுமிச்சை, சோளம், மக்காச்சோளம், கடலை உள்ளிட்ட மானாவாரி பயிர்களை பயிர் செய்வதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். ஒரு காலத்தில் தென்னிந்திய அளவில் வத்தல் விலையை நிர்ணயம் செய்யும் வத்தல் மார்க்கெட்டாக விளங்கிய சங்கரன்கோவிலில் இன்று புளியங்குடிக்கு அடுத்தபடியாக எலுமிச்சை விவசாயம் காணப்படுகிறது.சங்கரன்கோவில் தொகுதிக்கு வெகுகாலமாக அமைச்சர் அந்தஸ்து உள்ளது.  1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதன்முதலாக சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற தங்கவேலு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அதுமுதல் தொடர்ந்து சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று அக்கட்சி ஆட்சி அமைத்தால் அதிகமான முறை அமைச்சர் பதவியும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமி, தற்போதைய அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் இதற்கு சான்றுகளாகும். கடந்த 91ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக இங்கு அதிமுகவே வெற்றி வருகிறது. தொடர்ந்து அமைச்சர்களை பெறும் தொகுதியாக இருந்த போதும் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு திட்டங்கள், தொழிற்சாலைகள் இங்கு இல்லை. இதனாலேயே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று அதேசமயம் அதிமுக ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கட்சியினர் மத்தியில் பரவலாக உள்ளது. தனி தொகுதி என்பதால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள சங்கரன்கோவிலை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர். தற்போது அங்கு வெற்றி பெற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ராஜலட்சுமி இம்முறையும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் என்கிற முறையில் எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உள்ளது. அதேசமயம் அமைச்சரின் மாமனாரும், 40 வருடம் கட்சியில் உழைத்து வரும் மூத்த நிர்வாகியுமான தற்போதைய நகர பொருளாளர் வேலுச்சாமியும் முயற்சி செய்து வருகிறார்.

இத்தொகுதியில் முன்பு சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்து அமைச்சர் கருப்பசாமி மறைந்த போது நடந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி இம்முறை எப்படியும் சீட் பெற்று விடுவது என்கின்ற முனைப்பில் இபிஎஸ் அணியில் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவரும், நீண்ட அரசியல் அனுபவத்திற்கு உரியவருமான நெல்லை கூட்டுறவு ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரமும் கடும் முயற்சி செய்து வருகிறார். இவரும் சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தல் சமயத்தில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டவர். வாசுதேவநல்லூர் முன்னாள் எம்எல்ஏ துரையப்பாவின் மகளும், மறைந்த முன்னாள் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தீபக்கின் மனைவியுமான கடையநல்லூர் ருக்மணி, ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரி தாளாளரும் பொறியியல் பட்டதாரியுமான சத்திய கலா என்பவரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். இவரது சகோதரியும் புளியங்குடி அரசு மருத்துவமனை டாக்டர் சங்கரியும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வை சின்னத்துரையும் சங்கரன்கோவில் தொகுதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இளைஞரணியில் மாநில பொறுப்பு, ஜெ.,பேரவையில் மாவட்ட பொறுப்புகளை வகித்த இவர், தொகுதி கேட்டு முக்கிய நிர்வாகிகள் மூலம் காய் நகர்த்தி வருகிறார். சங்கரன்கோவிலை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முத்துக்குட்டி, அவரது மனைவி முப்பிடாதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தனபால் ஆகியோரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். விருப்ப மனு அளித்திருக்கும் தனபால்  அரசியல் பணிக்காக அரசு பதவியில் இருந்து  கடந்த 2010ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றவர். இவர் அதிமுகவில் முன்னாள் மாவட்ட ஜெ. பேரவை துணை தலைவராகவும், தற்போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு முதல் தென்காசி மக்களவை தேர்தல்களில் தென்காசி தொகுதிக்கும்,  சட்டமன்ற தேர்தல்களில்  சங்கரன்கோவில்,  மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதிக்கும் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலமுறை அதிமுகவில்  மனு அளித்துள்ளார். குருவிகுளத்தைச் சேர்ந்த தங்க மாரியப்பனும் இந்த கோதாவில் இறங்கியுள்ளார். மொத்தத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் சீட் பெற போட்டா போட்டி நிலவுகிறது. இதற்காக பலரும் தலைநகர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்த யோகம் யாருக்கு அடிக்கப் போகிறது என்பதற்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

பெண்களுக்கே அதிக வாக்கு

சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 939 வாக்காளர்கள் உள்ளனர் இவர்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 739 பேர் ஆண்கள். ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 195 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் ஐந்து பேர். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். கடந்த முறை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை விட தற்போதைய வாக்காளர் பட்டியலில் 8 ஆயிரத்து 302 வாக்காளர்கள் புதிதாக இடம்பெற்றுள்ளனர். 544 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: