சீமை கருவேலத்தை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலத்தை காப்பாற்ற முடியும்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

காளையார்கோவில்: விளைநிலங்களை சீமை கருவேல மரங்களை வேருடன் அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவில் ஒன்றியம் 360க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட பெரிய ஒன்றியமாக சிவகங்கை மாவட்டத்தில் திகழ்கிறது. இந்த ஒன்றியத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்கின்றனர். விளைநிலங்களில் சீமை கருவேலமரங்களின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்ய நிலத்தை சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. மேலும் சீமை கருவேல மரங்களால் மண் மலட்டுத்தன்மை ஆவதுடன் நிலத்தடி நீரும் அதிகளவில் உறிஞ்சப்படுவதால் விளைச்சலும் பாதிப்படைகிறது. சீமை கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளை நிலங்களை காப்பாற்ற முடியும். இதற்கான இயந்திர செலவு அதிகமாக இருப்பதால், போதிய வசதியில்லாத விவசாயிகள் அழிக்காமல் விட்டு விட்டனர்.

இதை கருத்தில் கொண்டு சில ஆண்டு    களுக்கு முன்பு சீமை கருவேல மரங்களை அழிப்பதற்கு அரசு முன் வந்து அந்தந்த தாலுகா அலுவலகம் மூலமாக ஏலம் விடப்பட்டன.

அப்போது ஏலம் எடுப்பவர்களிடம் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்கு விதிமுறைகளை அறிவிக்காமல் ஏலம் விட்டு விட்டனர். இதனால் அனைத்து பகுதிகளிலும் சீமை கருவேல மரங்களை முழுமையாக வெட்டாமலும், வெட்டிய மரத்தின் வேர் பகுதியினை தோண்டாமலும் விட்டு விட்டனர். இதனால் சில மாதங்களுக்கு முன்பு பெய்தே சிறு மழைக்கே மீண்டும் முளைக்க துவங்கிய சீமை கருவேல மரங்கள் தற்போது அடர்ந்து வளர்ந்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் விவசாயம் செய்வதற்கான நிலங்கள் குறைந்து சீமை கருவேல மரங்கள் மட்டுமே நிலங்களில் வளரக்கூடிய நிலை ஏற்படும். எனவே அரசு மீண்டும் நடவடிக்கை எடுத்து சீமை கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: