பறக்கும் படை சோதனை எதிரொலி சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

ஊட்டி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் சுற்றுலா பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளும் நிலையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாதலம் என்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பொதுவாக மார்ச் மாதம் துவங்கியவுடன் சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இதனை சமாளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசனின் போது சுற்றுலாப் பயணிகள் வர அனுமதி இல்லாது இருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது. கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில் இம்மாதம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என கடந்த 26ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் தேர்தலின் போதே பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல்வாதி வாகனங்கள் மட்டுமின்றி அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்கின்றனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களிலும் இவர்கள் சோதனை மேற்கொள்வதால், அவர்கள் அச்சத்துக்கு உள்ளாகின்றனர். மேலும், அவர்கள் சுற்றுலாவிற்காக எடுத்து வரும் பணமும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருந்தால் அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். மீண்டும் இந்த பணத்தை வாங்க சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த தொல்லைகளிலிருந்து தப்பிக்க பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதை தவிர்த்து விட்டனர். இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா ஆகிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குறைந்து காணப்படுகின்றனர்.

Related Stories:

>