சட்டமன்ற தேர்தல் 2021 ரவுண்ட் அப் மேட்டுப்பாளையம் தொகுதியில் ‘ஏ.கே.எஸ்.’ - ‘ஓ.கே.சி.’ மல்லுக்கட்டு...!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமானது மேட்டுப்பாளையம் சட்டமன்ற ெதாகுதி. நீலகிரி மலையின் அடிவாரத்தில் இத்தொகுதி அமைந்துள்ளது. கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணை இத்தொகுதியில்தான் உள்ளது. 2005ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம், பாரம்பரிய சின்னமாக அறிவித்த நீலகிரி மலை ரயில், இங்கிருந்துதான் நீலகிரிக்கு பயணிக்கிறது. விவசாயத்துக்கு பக்க பலமாக இருக்கும் பவானி ஆறு இத்தொகுதியில்தான் ஓடுகிறது. பரளிக்காடு சுற்றுலா தலம், கல்லாறு பழப்பண்ைண ஆகியவையும் இத்தொகுதியில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற வனப்பத்ரகாளியம்மன் கோயில், காரமடை அரங்கநாதர் கோயில் ஆகியவையும் இத்தொகுதியில் உள்ளன. இத்தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி என்னும் இடத்தில்தான் ஆண்டுதோறும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான முகாம் தற்போது நடந்து வருகிறது.

இத்தொகுதியில், ஒக்லிக கவுடர், வெள்ளாள கவுண்டர், நாடார், பட்டு நெசவாளர், முதலியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இத்தொகுதியில், மேட்டுப்பாைளயம் நகராட்சி மற்றும் சிறுமுகை பேரூராட்சி, காரமடை பேரூராட்சி, எண்.4 வீரபாண்டி பேரூராட்சி, கூடலூர் பேரூராட்சி என 4 பேரூராட்சிகள் உள்ளன. தவிர, 18 ஊராட்சிகளும் உள்ளன. இத்தொகுதியில், ஆண்கள் 1,43,198 பேர், பெண்கள் 1,52,566 பேர், மூன்றாம் பாலினத்தினர் 38 பேர் என மொத்தம் 2,95,802 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 1852ம் ஆண்டு முதல் இத்தொகுதியில் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில், 8 முறை அ.தி.மு.க., 2 முறை தி.மு.க., 4 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒருமுறை சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஓ.கே.சின்னராஜ் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இவர், 2006, 2011, 2016 என தொடர்ச்சியாக 3 முறை இதே தொகுதியில் போட்டியிட்டு 15 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்துவிட்டார். தற்போது மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட கட்சியின் மேலிடத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஒரே நபருக்கு எத்தனை முறை சீட் வழங்குது? என உட்கட்சியிலேயே எதிர்ப்பு வலுத்துள்ளது. இத்தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ.கே.செல்வராஜ் ஒருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அதன்பிறகு இவர், ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்தார். இம்முறை இவர், தனக்கு சீட் வழங்க வேண்டும் என கட்சியின் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுதவிர, சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் என்பவரும் இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார். ‘ஓ.கே.எஸ்.’ என அழைக்கப்படும் ஓ.கே.சின்னராஜ் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துவிட்டார். ‘ஏ.கே.எஸ்.’ என அழைக்கப்படும் ஏ.கே.செல்வராஜ் ஒரு முறை எம்.எல்.ஏ., இன்னொரு முறை எம்.பி. என இரு பதவிகளை அனுபவித்து விட்டார். அதனால், இவர்கள் இருவருக்கும் சீட் கொடுக்கக்கூடாது, எனக்குத்தான் சீட் வழங்க வேண்டும் என ஞானசேகரன் கொடி தூக்கியுள்ளார்.

இவரைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் ராஜ்குமார், நாசர் ஆகியோரும் விருப்ப மனு தாக்கல் செய்து, ரேஸில் பங்கெடுத்து உள்ளனர். எத்தனை பேர் மல்லுக்கட்டினாலும், ஓ.கே.எஸ். மற்றும் ஏ.கே.எஸ். ஆகிய இருவருக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இவர்களில், ஏ.கே.எஸ்.க்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது என கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதனால், ஓ.கே.எஸ்., ஞானசேகரன், ராஜ்குமார், நாசர் ஆகியோர் கடும் கோபத்தில் உள்ளனர். யாருக்கு சீட் கொடுத்தாலும், எதிர்அணி உருவாகி, தேர்தல் வேலைபார்க்காமல் ஒதுங்கி விடுவார்கள் எனவும் அ.தி.மு.க. தொண்டர்கள் கூறி வருகின்றனர். இது, இத்தொகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Related Stories: