ஜெயங்கொண்டம் தொகுதி யாருக்கு? அதிமுகவில் குடுமிபிடி சண்டை

* சிக்கலில் சிட்டிங் எம்எல்ஏ

* முட்டி மோதும் கூட்டணி கட்சியினர்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவுக்கு எதிராக அவருடன் பணியாற்றி வரும் நிர்வாகிகளே களமிறங்கி உள்ளனர். இதுதவிர அதிமுக கூட்டணிக்கு என முடிவு செய்யப்பட்டால் கூட்டணி கட்சியாக உள்ள பாமக, பாஜகவிற்கு சீட்டு கிடைக்கும் என எதிர்பார்த்து வருவதால் சிட்டிங் எம்எல்ஏவுக்கு திடீர் சிக்கல் நிலவுகிறது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் என 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஜெயங்கொண்டம் தொகுதி பொது தொகுதியாக உள்ளது. இதில் உடையார்பாளையம், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி 1951 முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. கடந்த 1951ல் இருந்து நடைபெற்ற 15 சட்டமன்ற தொகுதி தேர்தலில் 5 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும், 4முறை காங்கிரசும், ஒருமுறை தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும், ஒருமுறை பாமகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2016 தேர்தலில் பாமகவை எதிர்த்து போட்டியிட்ட ராமஜெயலிங்கம், 22,643 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார். அதிமுக கூட்டணியில் ஜெயங்கொண்டம் தொகுதி யாருக்கு என முடிவாகாததால் பாமக சார்பில் மாநில துணை பொது செயலாளர் திருமாவளவன், வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்திலிங்கம் ஆகியோரும், பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டால் பாஜக அரியலூர் மாவட்ட தலைவர் ஐயப்பன் ஆகியோரும் தங்களுக்கு சீட்டு கிடைக்கும் என முட்டி மோதி வருவதால் சிட்டிங் எம்எல்ஏ ராமஜெயலிங்கத்திற்கு சிக்கல் நிலவுகிறது. கிடப்பில் உள்ள நிலக்கரி அனல்மின் திட்டம்: சிட்டிங் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தன்னால் முடிந்த அளவில் ஜெயங்கொண்டம் பகுதியில் சாலை வசதிகள் புதிய அரசு கலைக்கல்லூரி பழைய பேரு ந்து நிலையத்தில் விரிவாக்கம் மகப்பேறு மருத்துவமனை விஸ்தரிப்பு என பல புதிய திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலும் அவரால் நிறைவேற்றப்பட முடியாத கிடப்பில் உள்ள திட்டங்கள் பொது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

27 வருடங்களாக இதோ செயல் படுத்துகிறோம் நாங்கள் செயல்படுத்தி விடுவோம் என கூறி வந்த ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி அனல்மின் திட்டம் செயல்படுத்த முடியாததால் விவசாயிகள் தங்களது நிலங்களை திருப்பி கேட்டு வருகின்றனர். அவர்களிடத்தில் நிலங்களை திருப்பியும் பெற்றுத்தர முடியவில்லை. விவசாயிகள் கோரும்உரிய இழப்பீடும் பெற்றுத்தர முடியாமல் போய் விட்டன. நிறைவேற்றப்படாத திட்டங்களாக போய் விட்டன: அரியலூர் மாவட்டத்திலேயே அதிக முந்திரி உற்பத்தி செய்யக்கூடிய பகுதிகள் ஜெயங்கொண்டம் தொகுதி ஆகும். முந்திரி தொழிற்சாலை அமைக்க முடியவில்லை. நகராட்சி மக்கள் எதிர்பார்த்த பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் நகர்மன்றத்தில் அரங்கேற்றம் செய்தும் நிறைவேற்றப்படாத திட்டங்களாக போய்விட்டன.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் எதிர்ப்பை சம்பாதித்த அதிமுக

உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்ய வண்டிய ஊரக பணிகள் குடிநீர் தொட்டிகள் சாலை வசதிகள் போன்றவற்றை நேரடியாக ஒப்பந்ததாரரிடம் கொடுத்ததால் அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் இடத்தில் எதிர்ப்பை சம்பாதித்தனர். புதிய அரசு கலைக்கல்லூரி ஜெயங்கொண்டத்தில் வரவேற்கப்பட்டாலும் முன்பு இயங்கி வந்த அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி கட்டிடத்தில் இயங்கத் துவங்கியது. தற்போது அந்த பெண்கள் உயர்நிலை பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியாக இயங்கி வருகிறது. விரைவில் ஒன்றாக இணைத்து அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி காணாமல் போகும் நிலை உண்டாகும். விரைவில் புதிய அரசு கலைக்கல்லூரி கட்டிடம் கட்ட வேண்டும் என மாணவ, மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளன.

Related Stories:

>