பள்ளி, கல்லூரிகள் திறந்தும் மூடிக்கிடக்கும் அரசு விடுதிகள் படிப்பை தொடர முடியாமல் பழங்குடி மாணவர்கள் தவிப்பு

* கொரோனா கட்டுப்பாடு என்று பூட்டு

* எதிர்காலம் வீணாவதாக வேதனை

சேலம்: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்தும் அரசு விடுதிகள் மூடிக்கிடப்பதால் பழங்குடியின மாணவர்கள், படிப்பை தொடர முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இந்தியாவில் 8 சதவீதம் பழங்குடியின மக்கள் உள்ளனர். தமிழகத்தில் அவர்களது எண்ணிக்கை ஒரு சதவீதமாக உள்ளது. பல்வேறு மலைகளில் வெவ்வேறு சமூக, கலாசார பொருளாதார சூழலில் வாழும் இவர்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் 54சதவீதம் மட்டுமே என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இலவச கல்வி உரிமைச்சட்டத்தில் 3 கிலோ மீட்டருக்குள் தொடக்கப்பள்ளி இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தாலும் மலைப்பகுதிகளில் இதற்கு சாத்தியமில்லை. இதேபோல் மலைகளில் அவர்கள் வசித்தாலும் கரும்பு வெட்டுதல், மூங்கில் வெட்டுதல், செங்கல்சூளை என்று பிழைப்பு ேதடி, அவர்கள் சமவெளிப் பகுதிகளுக்கு செல்கின்றனர். அதோடு குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்கின்றனர். இதனால் பழங்குடியின மக்களின் குழந்தைகளின் கல்வி தடைபடுவதோடு, அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக உருவாகும் அவலமும் தொடர்கிறது. இதே போல், பெண் குழந்தைகளை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கும் நிலையும் உள்ளது. இப்படி பெரும் சோதனைகளுக்கு மத்தியில் பல குழந்தைகள் மேல்நிலை கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.

இது போன்ற குழந்தைகளை தங்கவைத்து கல்வி வழங்க தமிழகத்தில் 314 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த வகையில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மலைகிராமங்கள் உள்ளன. இந்த மலைகிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்காக உண்டு உறைவிட பள்ளிகளும், பழங்குடியினர் நல விடுதிகளும் செயல்பட்டு வருகிறது. தங்கள் வாழ்விடத்தை விட்டு, பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வந்து கல்வி பயின்றுவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வது சிரமம். இதனால் அவர்கள் நகரப்பகுதிகளில் தங்கி படிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் இந்த விடுதிகள் இயங்கி வருகிறது.கொரோனா ஊரடங்கால் இந்த விடுதிகள் பூட்டப்பட்டது. பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து தற்ேபாது மேல்நிலைபள்ளிகளில் பிளஸ்2 வகுப்புகள் நடந்து வருகிறது. அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பழங்குடியின மாணவர் விடுதிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து பழங்குடியினர் மேம்பாட்டுக்கான மக்கள் இணையம் அமைப்பின் நிர்வாகி ராமு கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு உதவிடும் வகையில் அரசு விடுதிகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில்  மலைகிராமங்களுக்கும், நகரில் உள்ள பழங்குடியினர் நல விடுதிகளுக்கும் மாணவர்கள் சென்று வருவதற்கான தூரம் குறைந்தது 80 கிலோ மீட்டராக உள்ளது. கொரோனாவை காரணம் காட்டி, விடுதிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தினசரி பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் மாணவர்களை விட, மாணவிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் பலரால் கல்வியை தொடர முடியாத அவலம் நீடிக்கிறது. ஏற்கனவே பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில், மலைகிராமத்து பழங்குடியின மாணவர்கள், படிப்பை தொடர்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் விடுதிகள் மூடப்பட்டு கிடப்பது, அவர்களது கல்விக்கான வாசலை அடைப்பதாகவே உள்ளது. எனவே உண்டு உறைவிடப்பள்ளிகளையும், பழங்குடியினர் மாணவர் விடுதிகளையும் உடனடியாக திறப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories:

>