விசிக.வில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்: 10ம் தேதி நேர்காணல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. 10ம் தேதி நேர்காணல் நடக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய விருப்ப மனு வினியோகம் மாலை 5 மணியுடன் முடிந்தது. முதல்நாளான நேற்று ஏராளமானோர் விருப்ப மனுக்களை வாங்க குவிந்தனர்.

தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் குணவழகன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா, தேர்தல் பணிக்குழு மாநில துணை செயலாளர்கள் தனக்கோடி, வழக்கறிஞர் தமிழினியன் ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர். நாளையுடன் விருப்ப மனு விநியோகம் முடிவடைகிறது.விருப்ப மனு விநியோகத்தின் போது விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விருப்ப மனு பெற்றவர்களுக்கு வரும் 10ம் தேதி நேர்காணல் நடக்கிறது. அதன்பின்னர், வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளோம். விருப்ப மனு விநியோகம் தொடங்கிய அரை மணி நேரத்தில் 51 பேர் விண்ணப்பித்துள்ளனர். திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. எக்காரணத்தை கொண்டும் தமிழகத்தில் சாதிவெறி சக்திகளும், மதவெறி சக்திகளும் வலிமை பெற்றுவிடக்கூடாது.

தமிழகம் சமூகநீதிக்கு புகழ்பெற்று விளங்கும் ஒரு மாநிலமாக விளங்குகிறது. இந்த சூழலில் பாஜ சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அரசியலை நடத்த முயற்சிக்கிறது. சனாதனத்தை இங்கு நிலைநாட்ட துடிக்கிறது. சாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சிக்கிறது. திமுக தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெறும். அதிமுக கூட்டணியில் பாஜவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியின் வெற்றி இந்த 20ல் இருந்து தொடங்கியுள்ளது. பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. ஆரம்பத்திலேயே அதிமுக 20 இடங்களை திமுகவிற்கு விட்டுக்கொடுத்திருக்கிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: