செவ்வாய், புதன், வியாழனில் மட்டும் நடக்கும் உச்ச நீதிமன்றத்தில் 15 முதல் வழக்குகள் நேரடி விசாரணை: காணொலி நடைமுறையும் தொடரும்

புதுடெல்லி: ‘வரும் 15ம் தேதி முதல் வாரத்தில் மூன்று நாட்களுக்கு நேரடி விசாரணை நடத்தப்படும்,’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, கடந்தாண்டு மார்ச்சில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நாடே முடங்கியது. நீதிமன்றங்கள் மூடப்பட்டன. ஒரு சில முக்கிய வழக்குகள் மட்டும் காணொலி மூலமாக விசாரிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து, மத்திய அரசு அறிவித்து வரும் தொடர் ஊடரங்கு தளர்வுகள் காரணமாக, கீழ் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் நேரடி விசாரணை நடத்தப்படவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் வரும் 15ம் தேதி முதல் வாரத்துக்கு 3 நாட்கள் மட்டும் நேரடி விசாரணை நடத்தப்பட உள்ளது. மற்ற 2 நாட்கள் வழக்கம்போல் காணொலி மூலமாக வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

* மார்ச் 15ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மட்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நேரடியாக விசாரணை நடத்தப்படும்.

* அதே நேரம், காணொலி மூலமாக நடக்கும் விசாரணையும் நடைமுறையில் இருக்கும்.

* திங்கள், வெள்ளிக் கிழமைகளில் காணொலி மூலமாக மட்டுமே அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும்.

* நேரடி விசாரணையின்போது வழக்கில் வாதாடும் இருதரப்பு வழக்கறிஞர்கள், உதவியாளர்கள் மட்டுமே விசாரணை அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

* நேரடி விசாரணைக்காக நீதிபதிகள் நேரடியாக விசாரணை அறைக்கு வருவார்கள்.

* மனுதாரர் அல்லது எதிர்மனுதாரர்களில் யாராவது ஒரு பிரிவினர் மட்டுமே நேரில் வரலாம். மற்றவர்கள் அனைவரும் காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே ஆஜராக வேண்டும்.

* நீதிமன்றத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>