மேற்கு வங்கத்தில் பயங்கரம் வெடிகுண்டு வீசி தாக்குதல் பாஜ.வினர் 6 பேர் படுகாயம்: 2 பேர் உயிர் ஊசல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசார் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில், பாஜ.வை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. குறிப்பாக, இம்முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற வேகத்தில் பாஜ. தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல், 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் ஆளும் திரிணாமுல் காங்கிரசும் உள்ளது. இக்கட்சிகளுக்கு இடையேதான் தற்போது இங்கு கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் நடப்பதும் அதிகமாகி இருக்கிறது.

இந்நிலையில், தெற்கு பர்கானஸ் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பாஜ.வினர் அதிகளவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து கொசாபா பகுதியில் அவர் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது மர்ம நபர்கள் திடீரென வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 2 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், மேற்கு வங்கத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இருகட்சிகளின் தொண்டர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் நடக்கும் என சந்தேகிக்கப்படுவதால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

* பாஜ.வில் இணைந்தார் திரிணாமுல் மாஜி எம்பி

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் தினேஷ் திரிவேதி. இக்கட்சியின் முன்னாள் மககளவை எம்பி.யான இவர், நேற்று காலை பாஜ தலைவர் ஜேபி நட்டாவின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘இது என் வாழ்க்கையில் முக்கியமான தருணம். இதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். கட்சி மாறியதால் என்னுடைய சித்தாந்தத்தை மாற்றியதாக அர்த்தமில்லை. தேசம் எல்லா சித்தாந்தங்களுக்கும் மேல் உயர்ந்தது. பிரதமர் மோடியாலும், பாஜ.வாலும் நாடு பாதுகாப்பாக இருக்கிறது,’’ என்றார்.

* வெடிகுண்டு தயாரித்தபோது நடந்ததா?

இந்த வெடிகுண்டு தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை அக்கட்சி மறுத்துள்ளது. ‘பாஜ பிரமுகர் ஒருவரின் வீட்டில் வெடிகுண்டு தயாரித்தபோது, அது எதிர்பாராமல் வெடித்துள்ளது. அதை மறைப்பதற்காக எங்கள் கட்்சியினர் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது,’ என  திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.

Related Stories:

>