சொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை; கள்ளக்காதலால் விபரீதம்; எஸ்ஐ மகனும் சிக்கினார் 2 ஆண்டுகளுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம்,ஜெம் நகரில் வசித்தவர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னையன்பட்டியை சேர்ந்த கொஞ்சி அடைக்கான் (40). இவரது மனைவி பழனியம்மாள் (34). கடந்த 2019 ஆகஸ்ட் 3ம் தேதி வேலைக்கு சென்ற கொஞ்சி அடைக்கான், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பழனியம்மாள், காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்திவு செய்து 2 ஆண்டுகளாக, விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் பழனியம்மாள், தனது கணவரின் செல்போன் சிம்கார்டை, செல்போனில் போட்டுள்ளார். அப்போது, புதுக்கோட்டை வங்கியில் கொஞ்சி அடைக்கான் கணக்கில் இருந்து ரூ.3.5 லட்சம் எடுத்தாக தகவல் வந்தது. இதை கண்ட பழனியம்மாள், வடக்கு மண்டல ஐ.ஜி., சங்கரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

அதில், கொஞ்சி அடைக்கான். கடந்த 2009ம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதூரில் தங்கி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தார். ஸ்ரீபெரும்புதூர் சுபத்ரா நகரில், கடந்த 2007ம் ஆண்டு வீடு கட்டினார். பின்னர் அவர், தனது பெரியம்மா மகன் கொஞ்சி அடைக்கான், அவரது மனைவி சித்ரா, அவர்களது 2 மகள்கள், ஒரு மகனை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது, அண்ணனுக்கு வேலை இல்லாததால் ₹3 லட்சம் கொடுத்து, கார் வாங்கி கொடுத்துள்ளார். இந்தவேளையில், கொஞ்சி அடைக்கானுக்கும், சித்ராவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த சித்ராவின் கணவன், கடந்த 2010ம் ஆண்டு சொந்த ஊரான பொன்னையன்பட்டிக்கு சென்றுவிட்டார். பின்னர் சித்ரா, கொஞ்சி அடைக்கானுடன் வசித்து வந்தார்.

இதையொட்டி கடந்த 2015ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனியம்மாளுக்கும், கொஞ்சி அடைக்கானுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது சித்ராவுக்கும் கொஞ்சி அடைக்கானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்துவிட்டு, இப்போது வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டில் தங்க கூடாது என தகராறு செய்துள்ளார்.

இதனால் கொஞ்சி அடைக்கான், மனைவி பழனியம்மாளுடன் காஞ்சிபுரம் அடுத்த ஜெம் நகரில் வீடு வாடகை எடுத்து வசித்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தவேளையில் சுபத்திரா நகரில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்ய கொஞ்சி அடைக்கான் முயற்சி செய்தார். அதற்கு சித்ரா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு, தடுத்து வந்தார்.

ஆனாலும், கொஞ்சி அடைக்கான் ஸ்ரீபெரும்புதூர் பகுதிய சேர்ந்த ஒருவருக்கு தனது வீட்டை விற்பனை செய்ய ரூ.5 லட்சம் அட்வான்ஸ் பெற்றார். இதையறிந்த சித்ரா, கொஞ்சி அடைக்கானை கொலை செய்துவிட்டால் இந்த வீடு நமக்கு சொந்தமாகிவிடும் என முடிவு செய்தார். அதற்கான திட்டம் தீட்டினார். அதன்படி, தனது மகளின் காதலன்  ஏழுமலையை உதவிக்கு அழைத்தார். பின்னர் ஏழுமலை, சித்ராவின் மகன் ரஞ்சித்குமார் ஆகியோர், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த போலீஸ் எஸ்ஐ மகன் டார்ஜனிடம் சென்றனர். பின்னர் படப்பையை சேர்ந்த விவேகானந்தன் என்ற கூலிப்படை தலைவனை வைத்து கடந்த 2019ம் ஆண்டு கொஞ்சி அடைக்கானை கடத்தி கை, கால்களை கட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்து, இரும்பு பேரலில் அடைத்து, பின்னர் சிமென்ட் கலவையால் பேரல் முழுவதும் பூசி வேனில் ஏற்றி கொண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே மலைப்பட்டு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத விவசாய கிணற்றில் இரும்பு பேரலை வீசி சென்றனர் என தெரிந்தது.

இதையடுத்து போலீசார், சித்ரா, அவரது மகன் ரஞ்சித்குமார், மகளின் காதலன் ஏழுமலை, போலீஸ் எஸ்ஐ மகன் டார்ஜன், படப்பையை சேர்ந்த கூலிப்படை தலைவர் விவேகானந்தன் ஆகியோரை கைது செய்தனர். இதைதொடர்ந்து, மலைப்பட்டு பகுதியில் உள்ள கிணற்றின் தண்ணீரை இரைத்து சடலத்தை மீட்டனர். பின்னர், சம்பவ இடத்திலேயே செங்கல்பட்டு அரசு டாக்டர் கார்திகேயன் பிரேத பதிசோதனை செய்தார். இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்காக எலும்பு கூடுகளை சேகரித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான சித்ராவின் வழக்கறிஞர், அவரது கள்ளக்காதலன் உட்பட 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் சொத்துக்காக அண்ணியே, தனது மகனை வைத்து மைத்துனனை கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: