தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது: கடந்த மாதத்தைவிட 1000 மெகாவாட் உயர்வு

சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியுள்ளது. இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 1000 மெகாவாட் அதிகமாகும். வரும் நாட்களில் மின்தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வீடு மின்இணைப்பு- 2 கோடி; வணிகம்- 36 லட்சம்; தொழிற்சாலைகள் 7 லட்சம்; விவசாயம்-21 லட்சம்; குடிசைகள்-11 லட்சம், இதர பிரிவு-14 லட்சம் என 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்க அனல், காற்றாலை, சூரியசக்தி, நீர் மின்நிலையங்களை தமிழக மின்சார வாரியம் ஏற்படுத்தியுள்ளது.

இதில் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கோவை மாவட்டங்களில் 8 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நீர் மின்நிலையங்கள் கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் உள்ளது. காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களில் காற்று அதிகமாக வீசும்போதே கூடுதல் மின்சாரம் கிடைக்கும். இதேபோல் மழை பெய்யும் நேரங்களில் நீர் மின்நிலையங்களில் உற்பத்தி கூடுதலாக இருக்கும். தற்போது காற்று, மழை காலங்கள் இல்லாததால் இங்கு குறைவான அளவு மின்சாரமே உற்பத்தியாகிறது.

எனவே மின்உற்பத்தியில் அனல் மின்நிலையங்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. இவை நெய்வேலி, மேட்டூர், கூடங்குளம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் அமைந்துள்ளது. இங்கிருந்து தற்போதைய நிலவரப்படி 4,500 மெகாவாட்டிற்கு மேல் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் தேவைக்கு ஏற்ப ெகாள்முதல் செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் தமிழகத்தில் மின்தேவை குறைந்து இருந்தது. பிறகு படிப்படியாக அவை செயல்பட துவங்கியது. இதனால் மாநிலத்தின் மின்தேவையும் உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால் மழை, குளிர் காரணமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு குறைவாக இருந்தது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தமிழகத்தில் வெயில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் தமிழகத்தில் மின்தேவையும் உயர்ந்தது. தற்போது வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

எனவே பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இதன் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. இதனால் வீடுகளில் மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதாவது ஏசி, பிரிட்ஜ், ஃபேன் போன்றவற்றை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த துவங்கி விட்டனர். இதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆயிரம் மெகாவாட் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 5ம் தேதி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 14,224 மெகாவாட்டாக இருந்தது. இதுவே நேற்று முன்தினம் (மார்ச் 5) தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 15,275 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மின்தேவையின் அளவு மேலும் உயர்வதற்கான வாய்ப்புள்ளது. இதற்கு கோடை வெயிலின் தாக்கத்தால், மின்சாதனங்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்பதே காரணம். மேலும் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவும் உயர வாய்ப்புள்ளது.

Related Stories:

>